ஐபிஎல் 2020 அட்டவணை எப்போது வெளியிடப்படும்? இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. அறிவிப்பு தேதியை உறுதிசெய்த ஐபிஎல் தலைவர்

By karthikeyan VFirst Published Sep 5, 2020, 3:23 PM IST
Highlights

ஐபிஎல் 2020 முழு போட்டி அட்டவணை கண்டிப்பாக நாளை வெளியிடப்படும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, முன்கூட்டியே அங்கு சென்று பரிசோதனைகளுக்குட்படுத்தி கொண்ட அனைத்து அணிகளும், பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த ஐபிஎல் சீசனை நடத்துவதே கடும் சவாலாக இருந்துவந்த நிலையில், சிஎஸ்கே அணியில் 13 பேருக்கும், பிசிசிஐ அதிகாரி ஒருவர் என மொத்தம் 14 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல கட்டமாக அனைவருக்கும் மீண்டும் மீண்டும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுவரை 14 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது பிசிசிஐக்கு ஐபிஎல்லை எந்த சிக்கலும் இல்லாமல் நடத்தி முடிப்பதை மேலும் சவாலாக்கியுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில், அனைத்து அணியினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு மட்டுமே ரூ.10 கோடி செலவு செய்கிறது பிசிசிஐ. இந்நிலையில், இதுவரை 14 பேருக்கு கொரோனா உறுதியானதால், நிலைமையை பிசிசிஐ கண்காணித்துவந்ததால், ஐபிஎல் முழு போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதமானது.

இதற்கிடையே, ஐபிஎல் 2020 அட்டவணை செப்டம்பர் 4(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என அதற்கு முந்தைய நாளான 3ம் தேதி பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால் கங்குலி கூறியபடி, நேற்று அட்டவணை வெளியிடப்படவில்லை. இதையடுத்து, ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு குறித்த கேள்வி எழுந்த நிலையில், ஐபிஎல் 2020 முழு போட்டி அட்டவணை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
 

click me!