ஐபிஎல் 2020: மலிங்காவுக்கு மாற்று வீரராக ஆஸி., ஃபாஸ்ட் பவுலரை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ்

By karthikeyan VFirst Published Sep 4, 2020, 7:57 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்காவுக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் பாட்டின்சனை ஒப்பந்தம் செய்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. கொரோனா அச்சுறுத்தல், தனிப்பட்ட காரணங்கள் என சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளனர்.

அந்தவகையில், மும்பை இந்தியன்ஸின் மேட்ச் வின்னர் மலிங்காவும் சொந்த காரணங்கள் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸின் விலைமதிப்பற்ற சொத்து. அந்த அணிக்கு பல இக்கட்டான நேரங்களில் டெத் ஓவர்களை அபாரமாக வீசி வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். 

கடந்த சீசனில் கூட, சிஎஸ்கேவுக்கு எதிரான இறுதி போட்டியில், கடைசி ஓவரில் 8 ரன்கள் என்ற மிக எளிதான ரன்னை, அடிக்கவிடாமல், சிஎஸ்கே அணியை சுருட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4வது முறையாக கோப்பையை வென்றுகொடுத்தார். கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இதுமாதிரி ஏராளமான வெற்றிகளை மலிங்கா பெற்று கொடுத்திருக்கிறார். 

2009ம் ஆண்டிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் மலிங்கா, இதுவரை ஐபிஎல்லில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

இந்நிலையில், மலிங்கா இந்த சீசனிலிருந்து விலகியது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலத்த அடிதான். ஆனாலும் பும்ரா, டிரெண்ட் போல்ட் என மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கை பெற்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். இதுபோதாதென்று, மலிங்காவிற்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் பாட்டின்சனை ஒப்பந்தம் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான தேர்வு என்றும், அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிற்கு மேலும் வலுசேர்ப்பார் என்றும் அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

30 வயதான ஜேம்ஸ் பாட்டின்சன், ஆஸ்திரேலிய அணிக்காக 21  டெஸ்ட் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும் 15 ஒருநாள் போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!