ஐபிஎல் 2020: இந்த சீசனில் அவரோட ஆட்டத்தை பார்க்கத்தான் காத்திருக்கேன்..! கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 3, 2020, 9:55 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் கேஎல் ராகுல் எப்படி ஆடுகிறார் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்று பயிற்சியை தொடங்கிவிட்டன. ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான கவுதம் கம்பீர், இந்த சீசனில் கேஎல் ராகுலின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றி, தனது அபாரமான இன்னிங்ஸ்களின் மூலம் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். குறிப்பாக, இந்திய அணி வென்ற டி20 உலக கோப்பை(2007) மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011) ஆகிய 2 தொடர்களின் இறுதி போட்டியிலும் மிகச்சிறப்பாக ஆடி, இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்த கம்பீர், ஐபிஎல்லிலும் தான் கேப்டன்சி செய்த கேகேஆர் அணிக்கு 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களில் கோப்பையை வென்று கொடுத்தார்.

ஐபிஎல்லில் வெற்றிகரமான கேப்டன்கள் மற்றும் வீரர்களில் ஒருவரான கம்பீர், கேஎல் ராகுலின் திறமையை வெகுவாக புகழ்ந்துள்ளார். கடந்த 2 சீசன்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடிவரும் கேஎல் ராகுல், கடந்த சீசனில் 593 ரன்களை குவித்தார். டேவிட் வார்னருக்கு அடுத்தபடியாக கடந்த சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 

கேஎல் ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அசத்திவந்த நிலையில், இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். அதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், கேஎல் ராகுலின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

ராகுல் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், இந்த சீசனில் உண்மையாகவே, நான் கேஎல் ராகுலின் ஆட்டத்தை பார்க்கத்தான் ஆவலாக உள்ளேன். அவர் மிகச்சிறந்த டி20 கிரிக்கெட் வீரர். இந்த முறை கேப்டனாகவும் செயல்படவுள்ளார். சில நல்ல வீரர்கள், கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துள்ளனர்; சிலர் கேப்டன்சி அழுத்தத்தை தாங்கமுடியாமல் பின் வாங்கியுள்ளனர். கேஎல் ராகுல் என்ன செய்கிறார் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

click me!