அந்த பையன் இந்திய அணிக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.. இவன மாதிரி மேட்ச் வின்னர்களின் வளர்ச்சிக்கு நான் தடையா இருந்ததே இல்ல.. கங்குலி அதிரடி

By karthikeyan VFirst Published Apr 4, 2019, 2:43 PM IST
Highlights

உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. உலக கோப்பை அணி பரிசீலனையில் இருக்கும் வீரர்களை பரிசோதிக்க, ஐபிஎல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. உலக கோப்பை அணி பரிசீலனையில் இருக்கும் வீரர்களை பரிசோதிக்க, ஐபிஎல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் ஆகியவை வலுவாக உள்ளது. தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் 5ம் வரிசையும் பிரச்னையில்லை. 6ம் வரிசையில் கேதர் ஜாதவ் நன்றாகவே ஆடிவருகிறார். ஆனால் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய இரண்டு இடங்களும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதேபோல நான்காவது ஃபாஸ்ட் பவுலரும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. 

ராயுடு நன்றாக ஆடிவந்த நிலையில், திடீரென தொடர்ச்சியாக சொதப்பியதால் அவர் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவது சந்தேகமாகியுள்ளது. இதற்கிடையே விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடிவருகிறார். விஜய் சங்கர் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டிற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் வீரர்கள் ஆடிவருகின்றனர். குறிப்பாக டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடும் ரிஷப் பண்ட், பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு விக்கெட் கீப்பிங்கிலும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், உலக கோப்பை அணியில் ரிஷப் பண்ட் கண்டிப்பாக இருப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் கங்குலியும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். 

மற்ற வீரர்கள் அனைவரும் ஆடுவார்கள்; ஆனால் ரிஷப் பண்ட் 5 ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர் என்று கங்குலி ஏற்கனவே அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது ரிஷப் பண்ட் ஆடும் டெல்லி அணியின் ஆலோசகராக இருக்கும் கங்குலி, ரிஷப் பண்ட்டை மீண்டும் புகழ்ந்து பேசியுள்ளார். 

ரிஷப் பண்ட் குறித்து இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் பேசிய கங்குலி, ரிஷப் பண்ட் மிகச்சிறந்த திறமைசாலி; அவர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அவரது பேட்டிங் அபாரமானது. மிகச்சிறந்த வீரர்கள் தான் அப்படியான இன்னிங்ஸை ஆடி நான் பார்த்திருக்கிறேன். அணிக்காக மேட்ச்சை ஜெயித்து கொடுக்கக்கூடிய திறன் பெற்றவர் ரிஷப் பண்ட். எனது கிரிக்கெட் வாழ்வில் நான் கேப்டனாக இருந்தபோது அப்படியான மேட்ச் வின்னர்களுக்கு தடையாக இருந்ததே கிடையாது. ரிஷப் பண்ட்டின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று கங்குலி புகழ்ந்து பேசியுள்ளார். 

வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், தோனி ஆகிய வீரர்களைத் தான் கேப்டனாக இருந்தபோது வளர்த்துவிட்டவர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!