ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தோனியின் ருத்ரதாண்டவம்.. வீடியோ

By karthikeyan VFirst Published Apr 22, 2019, 10:28 AM IST
Highlights

ஜடேஜா 17வது ஓவரில் ரன் அவுட்டாக, 19வது ஓவரின் கடைசி பந்தில் பிராவோவும் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தோனி மட்டும் களத்தில் நிலைத்து நின்றார். 

ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் தோனி அதிரடியாக ஆடினார். வெற்றியை நெருங்கிய நிலையில், கடைசி பந்தில் தாகூர் ரன் அவுட் ஆனதால் ஒரு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இல்லையெனில் போட்டி டிரா ஆகி, சூப்பர் ஓவர் போடப்பட்டிருக்கும். 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி அணியும் சிஎஸ்கே அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, பார்த்திவ் படேலின் பொறுப்பான அரைசதம் மற்றும் கடைசி நேரத்தில் மொயின் அலியின் ஒருசில சிக்ஸர்களால் 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் அடித்தது. 

162 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் வாட்சன், டுபிளெசிஸ், ரெய்னா மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய 4 விக்கெட்டுகளையும் பவர்பிளேயிலேயே வீழ்த்திவிட்டது ஆர்சிபி அணி. அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். மந்தமாக ஆடிய ராயுடு 29 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

14வது ஓவரில் ராயுடு அவுட்டாக, அதன்பின்னர் தோனி ஆட்டத்தை கையிலெடுத்தார். ஜடேஜா 17வது ஓவரில் ரன் அவுட்டாக, 19வது ஓவரின் கடைசி பந்தில் பிராவோவும் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தோனி மட்டும் களத்தில் நிலைத்து நின்றார். 

கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவை. அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த தோனி, அடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன்னும் ஐந்தாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரும் அடிக்க, கடைசி பந்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த பந்தை தோனி அடிக்காமல் விட, எனினும் ஒரு ரன் ஓடினர். ஆனால் ஆர்சிபி விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் அந்த பந்தை பிடித்து ரன் அவுட் செய்தார். 

மறுமுனையில் இருந்து பேட்டிங் முனையை நோக்கி ஓடிய ஷர்துல் தாகூர் ரன் அவுட்டாக, கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி திரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 26 ரன்களை மன உறுதியோடு விரட்டிய தோனியின் அதிரடி வீடியோ இதோ.. 

click me!