
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன் 26 ரன்களில் அஷ்வினிடம் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டுபிளெசிஸ் மற்றும் ரெய்னா ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் அஷ்வின் வீழ்த்தினார். அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் இணைந்து மிடில் ஓவர்களில் நிதானமாக ஆடினர். வழக்கம்போலவே டெத் ஓவர்கள் வரை நிதானமாக இருந்த தோனி, கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடி ரன்னை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 160 ரன்கள் எடுத்தது.
161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் மற்றும் மயன்க் அகர்வாலை தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். பவர்பிளேயிலேயே கெய்ல் மற்றும் அகர்வாலை வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் ராகுலும் சர்ஃபராஸ் கானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் 18வது ஓவரில் ராகுலும் 19வது மில்லரும் கடைசி ஓவரில் சர்ஃபராஸும் ஆட்டமிழந்ததால் அந்த அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, யுனிவர்ஸ் பாஸ் கெய்லை தொடக்கத்திலேயே அவுட்டாக்கிவிட்டோம். அவர் மட்டும் அதிரடியாக ஆட ஆரம்பித்துவிட்டால், 200 ரன்கள் அடித்திருந்தால் கூட ஜெயிக்க முடியாது. 160 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் அல்ல. எனினும் கெய்ல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரையும் விரைவிலேயே வீழ்த்திவிட்டார் ஹர்பஜன் சிங். ஹர்பஜன் சிங் வீழ்த்திய அந்த இரண்டு விக்கெட்டுகள் மிக முக்கியமானது. அந்த விக்கெட்டுகள் விழாவிட்டால், 160 ரன்கள் என்பது பெரிய ஸ்கோரே அல்ல என்று தோனி தெரிவித்தார்.