பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கில் அசத்திய கேபிடள்ஸ்.. ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை தாரைவார்த்த ராயல்ஸ்

By karthikeyan VFirst Published Oct 14, 2020, 11:43 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 161 ரன்கள் அடித்தது. டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ரஹானேவும் வெறும் 2 ரன்னில் நடையை கட்ட, மறுமுனையில், இதற்கு முந்தைய போட்டிகளை போல அல்லாமல் அடித்து ஆடிய தவானுடன், ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார்.

தவானும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 180 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தவான், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல், 57 ரன்களுக்கு கார்த்திக் தியாகியின் பந்தில் ஆட்டமிழந்தார்.  அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயரும் 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க, செட்டில் பேட்ஸ்மேன்கள் இருவரும் ஆட்டமிழந்ததால், டெல்லி கேபிடள்ஸ் எதிர்பார்த்த ஸ்கோரை விட வெகுவாக குறைந்தது.

டெல்லி கேபிடள்ஸின் ஃபினிஷர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, அலெக்ஸ் கேரியும் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். இதையடுத்து டெத் ஓவர்களில் பெரிதாக ஸ்கோர் செய்யமுடியாத டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 161 ரன்கள் மட்டுமே அடித்தது.

நல்ல பேட்டிங் ஆர்டர் இருந்தும் கூட, தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரை தவிர வேறு யாரும் சரியாக ஆடாததால், டெல்லி கேபிடள்ஸ் 161  ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பட்லரும் ஸ்டோக்ஸும் இறங்கினர். பட்லர் 22 ரன்களிலும் அவரை தொடர்ந்து கேப்டன் ஸ்மித் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

மறுமுனையில் அதிரடியாக ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்திய ஸ்டோக்ஸ், 41 ரன்கள் அடித்து, 11வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 83 ரன்கள். அதன்பின்னர் எளிதாக வெற்றி பெறக்கூடிய போட்டியில் மிடில் ஆர்டர் சொதப்பலால் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவியது.

ரியான் பராக்கை ஒரு ரன்னில் ரன் அவுட்டாக்கினார் ராபின் உத்தப்பா. உத்தப்பா ரன்னுக்கு அழைத்ததால், அவரை நம்பி ரன் ஓடினார் ரியான் பராக். பாதியில் உத்தப்பா வேண்டாமென்றதால், ரியான் பராக் ஆட்டமிழந்தார். பராக்கை அவுட்டாக்கிய உத்தப்பா, அவராவது பொறுப்புடன் களத்தில் நின்று வெற்றியை தேடித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் 32 ரன்னில் ஆட்டமிழந்தார் உத்தப்பா.

அதன்பின்னர் அஷ்வின், ரபாடா, நோர்க்யா ஆகியோர் டெத் ஓவர்களை அருமையாக வீச, ராஜஸ்தான் அணியின் ஃபினிஷர் ராகுல் டெவாட்டியா களத்தில் இருந்தும் அந்த அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை. இதையடுத்து 20 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி கேபிடள்ஸ் அணி, பவுலிங்கில் அசத்தியது. அதற்கு நேர்மாறாக, பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோற்றது ராஜஸ்தான் அணி. இந்த வெற்றிக்கு 2 புள்ளிகளை பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மீண்டும் மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 

click me!