#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 29, 2020, 11:19 PM IST
Highlights

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் அதிரடியான பேட்டிங்கால் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆரை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரராக இறங்கிய நிதிஷ் ராணா, அருமையாக ஆடி அரைசதம் அடித்தார். அவரைத்தவிர வேறு யாரும் பெரிதாக அடிக்கவில்லை. கில்லும் ராணாவும் தொடக்க வீரர்களாக இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 53 ரன்கள் அடித்தனர். கில் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் பேட்டிங் ஆட வந்த சுனில் நரைன் 7 ரன்களுக்கும் அவரைத்தொடர்ந்து களத்திற்கு வந்த ரிங்கு சிங் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ராணா, அரைசதம் அடித்தார்.

பதினைந்து ஓவர் முடிவில் கேகேஆர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அந்த கட்டத்தில் 150-160 ரன்களுக்கு கேகேஆர் அணியை சுருட்டியிருக்க முடியும். ஆனால் கரன் ஷர்மா வீசிய பதினாறாவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் 19 ரன்களை குவித்தார் ராணா. அந்த ஓவர் தான் ஆட்டத்தை தலைகீழாக திருப்பியதுடன், கேகேஆர் அணி 172 ரன்களை எட்ட உதவியது. அதற்கடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய ராணா, 18வது ஓவரில் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 61 பந்தில் 87 ரன்கள் அடித்து ராணா அவுட்டானார். இன்னும் 2 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், ராணாவின் சதத்திற்கு 13 ரன்களே தேவைப்பட்ட நிலையில் சதத்தை தவறவிட்டார் ராணா. 

டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் தனது பணியை செவ்வனே செய்து 10 பந்தில் 21 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 172 ரன்கள் அடித்த கேகேஆர் அணி, 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.

173 ரன்கள் என்ற இலக்கை விரட்ட சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஷேன் வாட்சன் வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியான பேட்டிங்கால் 7.3 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு சிஎஸ்கே அணி 50 ரன்கள் அடித்தது.

அதன்பின்னர் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்த அம்பாதி ராயுடு, அவருடன் இணைந்து சிறப்பாக ஆடினார். கெய்க்வாட் மற்றும் ராயுடு ஆகிய இருவரும் ரன்ரேட் குறைந்துவிடாமல் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி அருமையாக ஆடினர். இருவரும் இணைந்து 6 ஓவரில் 68 ரன்களை குவித்தனர். ராயுடு 20 பந்தில் 38 ரன்களுக்கு கம்மின்ஸின்ன் பந்தில் ஆட்டமிழக்க, வருண் சக்கரவர்த்தியின் பந்தில் தோனி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அரைசதம் அடித்து, வெற்றிக்கு அருகில் அழைத்து சென்ற கெய்க்வாட், கம்மின்ஸ் வீசிய 18வது ஓவரில் 72 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்களை குவித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற செய்தார் ஜடேஜா. 

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, கேகேஆரின் பிளே ஆஃப் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
 

click me!