டெல்லி அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி!! புள்ளி பட்டியலில் முதலிடம்

By Selvanayagam PFirst Published Mar 27, 2019, 7:34 AM IST
Highlights

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது

ஐபிஎல் 12-வது சீசனின் 5-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில்  நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் பிரித்வி ஷாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

பிரித்வி ஷா 16 பந்தில் 5 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார். ரிஷப் பந்த் 13 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 தொடர்ந்து இறங்கிய கொலின் இங்கிராம் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கீமோ பால் டக் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தவான் நிலைத்து நின்று ஆடினார். அவர் அரை சதமடித்து அசத்தினார். அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது.

சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டும், சாஹர், தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. ராயுடு 5 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்களும் ரெய்னா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

இந்நிலையில் டோனியும், கேதர் ஜாதவும் பொறுப்புடன் விளையாடினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் கேதர் ஜாதவ், ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த பிராவோ தொடர்ந்து 2 பந்துகளின் ரன் எதும் எடுக்காமல் 3 ஆவது பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இரண்டு போட்டிகளிலும் வென்றதை அடுத்து புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளது. 

click me!