களத்துல நிக்கிறது யாரா இருந்தாலும் அதுக்குலாம் அசராம டெத் ஓவர்களில் கெத்து காட்டுவது எப்படி..? பும்ராவே சொல்றாரு பாருங்க

By karthikeyan VFirst Published Mar 29, 2019, 3:25 PM IST
Highlights

மீண்டும் கூடுதல் நெருக்கடியுடன் அந்த ஓவரை வீசிய பும்ரா, டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தும்கூட, அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது. 

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் கடைசிவரை களத்தில் இருந்தும் கூட, அவரை பெரிய ஷாட்டுகளை அடிக்கவிடாமல், கடைசி இரண்டு ஓவர்களில் அவரை கட்டுப்படுத்தி, ஆர்சிபி அணியை 181 ரன்களில் சுருட்டி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 

188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி, 16 ஓவர் முடிவில் 147 ரன்களை குவித்துவிட்டது. எஞ்சிய 4 ஓவரில் வெறும் 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்படியான நெருக்கடியான சூழலில் 17வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்ததோடு, ஹெட்மயரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஹர்திக் வீசிய 18வது ஓவரில் 18 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி 2 ஓவரில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

மீண்டும் கூடுதல் நெருக்கடியுடன் அந்த ஓவரை வீசிய பும்ரா, டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தும்கூட, அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் ஆர்சிபி அணியை 17 ரன்கள் அடிக்கவிடாமல் மலிங்கா தடுத்தார். மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பை இந்தியன்ஸின் வெற்றிக்கு பும்ரா, அவரது கடைசி 2 ஓவர்களை அபாரமாக வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததுதான் காரணம். அதுமட்டுமல்லாமல் கோலி, ஹெட்மயர், கோலின் டி கிராண்ட் ஹோம் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருதை வென்ற பும்ராவிடம் கோலி, டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு எதிரான திட்டம், நெருக்கடியான சூழலை கையாளும் திறன் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய பும்ரா, கோலி, டிவில்லியர்ஸ் யாராக இருந்தாலும் சரி.. எந்த வீரருக்கு எதிராகவும் பிரத்யேக திட்டங்கள் எல்லாம் வைத்துக்கொள்வதில்லை. சூழலுக்கு ஏற்றவாறு அந்த நேரத்தில் ஒவ்வொரு பந்திலும் ரன் கொடுக்காமல் எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று வீசுவதுதான். எனது பலம் எதுவோ அதை சிறப்பாக செயல்படுத்தி அந்த சூழலை எதிர்கொள்ள எனது திட்டத்தை சரியாக செயல்படுத்த முயல்வேன் என்று பும்ரா தெரிவித்தார். 

click me!