சுயநலமா பேசிய கோலி.. ஆனால் அவங்க டீமுக்கும் சேர்த்து பேசிய ரோஹித்!! இதுதான் 2 பேருக்கும் உள்ள வித்தியாசம்

By karthikeyan VFirst Published Mar 29, 2019, 1:44 PM IST
Highlights

நெருக்கடியான நேரத்தில் வீரர்கள் அர்ப்பணிப்புடன் ஆடும்போது அம்பயர்கள் செய்யும் இதுபோன்ற அலட்சியமான தவறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. 
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது. 

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் கடைசிவரை களத்தில் இருந்தும் கூட, அவரை பெரிய ஷாட்டுகளை அடிக்கவிடாமல், கடைசி இரண்டு ஓவர்களில் அவரை கட்டுப்படுத்தி, ஆர்சிபி அணியை 181 ரன்களில் சுருட்டி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 

ஆர்சிபி அணியின் இன்னிங்ஸின் போது அம்பயர்கள் சரியாக செயல்படவில்லை. இக்கட்டான சூழலில் 19வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை லைனை ஒட்டி வீசினார். அருமையாக வீசப்பட்ட அந்த பந்துக்கு அம்பயர் வைடு கொடுத்தார். அதேபோல இன்னிங்ஸின் கடைசி பந்தை மலிங்கா நோ பாலாக வீசினார். ஆனால் அதை அம்பயர் கவனிக்கவே இல்லை. இவ்வாறாக நெருக்கடியான நேரத்தில் வீரர்கள் அர்ப்பணிப்புடன் ஆடும்போது அம்பயர்கள் செய்யும் இதுபோன்ற தவறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. 

போட்டி முடிந்ததும், மலிங்கா வீசிய கடைசி பந்திற்கு நோ பால் கொடுக்காதது குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் கோலி, நாங்கள் ஐபிஎல்லில் ஆடுகிறோம்; கிளப் கிரிக்கெட்டில் அல்ல. எனவே அம்பயர்கள் கண்ணை நன்றாக திறந்து வைத்து பார்க்க வேண்டும். கடைசி பந்துக்கு நோ பால் கொடுக்காதது அபத்தமான விஷயம். அம்பயர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்று கோலி காட்டமாக தெரிவித்தார். 

அதன்பின்னர் பேசிய வின்னிங் கேப்டன் ரோஹித் சர்மா, எல்லாம் முடிந்தபிறகுதான் அந்த பந்து நோ பால் என்பது எனக்கு தெரியும். என்னிடம் யாரோ வந்து அது நோ பால் என்று சொன்னார்கள். இதுபோன்ற தவறுகள் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. பும்ரா வீசிய 19வது ஓவரில்  அந்த பந்து வைடே கிடையாது; ஆனால் வைடு கொடுத்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் ஆட்டத்தையே புரட்டி போட்டுவிடும்.  டிவி இருக்கிறது. எனவே அதை பார்த்து மிகவும் சரியாக முடிவை சொல்ல வேண்டும். கடைசி பந்து நோ பாலாக இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்து விட்டேன். இன்னிங்ஸின் கடைசி பந்து என்பதால் வீரர்கள், கொண்டாட்டத்திலும் எதிரணி வீரர்களுடன் கை குலுக்குவதிலும் தான் குறியாக இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். இதுபோன்ற தவறுகளை கண்டிப்பாக களைய வேண்டும் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். 

அம்பயர்களின் தவறு குறித்து பேசும்போது, கடைசி பந்தை நோ பால் கொடுக்காததை மட்டும் குறிப்பிட்டு கோலி பேசினார். ஆர்சிபி அணியின் இன்னிங்ஸின் போது மலிங்கா வீசிய கடைசி பந்தை நோ பால் கொடுக்காததை மட்டும்தான் குறிப்பிட்டார் கோலி. அதேவேளையில் எதிரணிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பேசவில்லை. 19வது ஓவரில் பும்ரா வீசிய அருமையான பந்துக்கு வைடு கொடுத்ததை பற்றி கோலி பேசவில்லை. ஆனால் அதேவேளையில், ரோஹித் சர்மாவோ, மலிங்கா வீசிய நோ பாலுக்கு நோ பால் கொடுக்காததை குறித்து அதிருப்தி தெரிவித்தார். பும்ரா வீசிய பந்து வைடு என்று சொல்லியதோடு நிறுத்தாமல், எதிரணிக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காதது குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். 

வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை அவசியம்தான். அதேநேரத்தில் எதிரணிக்கும் சேர்த்து பேசுவதுதான் நல்ல தலைமைத்துவ பண்பாக இருக்க முடியும். 

click me!