திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் செயலாளராக தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறிய சூழ்நிலைகளின் 'பின்னணி' குறித்து தங்கக் கடத்தல் மோசடியில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷால் முதல்வர் பினராயி விஜயன் மீதான குற்றச்சாட்டுக்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. இந்தத் தகவல்கள் தற்போது வாட்ஸ்அப்பில் உரையாடலாக பரவி வருகிறது.
கேரள முதல்வர் பினாராயி விஜயனுக்கு மீண்டும் தலைவலியாக இந்த உரையாடல்கள் அமைந்துள்ளன. தங்கக் கடத்தல் மோசடியில் முதல்வர் பினராயி விஜயன் மீது புதிய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. ஏன், எந்த சூழலில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதற்கான விளக்கத்தையும் ஸ்வப்னா சுரேஷ் அளித்துள்ளார்.
ஸ்வப்னா, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் முதன்மை செயலாளர் எம். சிவசங்கருக்கு இடையிளான உரையாடல் வெளியாகி இருக்கிறது. தற்போது, சிவசங்கர் லைஃப் மிஷன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை பாதுகாப்பில் சிறையில் இருக்கிறார். இவர்களது உடையாடலின் முக்கிய பரிமாற்றங்களை இங்கே காணலாம்.
வாட்ஸ்அப் உரையாடல்களில், கேரள புலம்பெயர்ந்தோரின் நலனைக் கவனிக்கும் வெளிநாட்டு வாழ் கேரள மக்கள் விவகாரத்துறைக்கு ஸ்வப்னா பெயரை சிவசங்கர் பரிந்துரை செய்து இருப்பதாக தெரிவிக்கிறார்.
Life Mission scam case: லைஃப்மிஷன் வழக்கில் வெட்ட வெளிச்சமான சிவசங்கர், ஸ்வப்னா சுரேஷ் உரையாடல்!!
'இன்று, நாங்கள் இந்த துறைக்கு ஒருவரை நியமிப்பது குறித்து ஆலோசித்தோம். நான் உங்கள் பெயரை பரிந்துரைத்தேன். தற்போது அவர்கள் அனைவரும் சரியான தேர்வு என்று ஒப்புக்கொண்டனர். நாளை முதல்வரைச் சந்தித்து இதை தெரிவிக்குமாறு என்னை கேட்டுக் கொண்டனர்''என்று இவர்களுக்கு இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல் கசிந்து இருக்கிறது.
மேலும் சிவங்கர் தனது உரையாடலில், ''நீங்கள் ராஜினாமா செய்கிறீர்கள் என்ற தகவல் முதல்வரின் கூடுதல் தனிப்பட்ட செயலாளர் ரவீந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது நீங்கள் ஐதராபாத்துக்கு பணி மாறுதலில் செல்ல இருக்கிறீர்கள் என்று தெரிவித்தேன். யூசுப் அலியின் பங்கு இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களது உரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ள 'யூசுப் அலி' NORKA-வின் துணைத் தலைவரும் லுலு குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான எம்ஏ யூசஃப் அலி என்று நம்பப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள், சபாநாயகர் மீது ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு..!
முதல்வர் தனக்கு உதவுகிறார் என்ற நம்பிக்கையை ஸ்வப்னா வெளிப்படுத்துகையில், சிவசங்கர் அவருக்கு உறுதியளிக்கிறார், "அவர் (முதல்வர்) யூசுப் அலிக்கு பயப்படவில்லை" என்று குறிப்பிடுகிறார். உரையாடலில், NORKA -வுடனான பணியில் "மத்திய கிழக்கு நாடுகளுக்கு'' ஒரு சிறிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியது இருக்கும்'' என்று ஸ்வப்னாவிடம் சிவசங்கர் கூறுகிறார்.
சர்ச்சைக்குரிய இந்த உரையாடல்களை வடக்கன்சேரி லைஃப் மிஷன் ஊழல் வழக்கில் சான்றாக அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. இதையடுத்தே இந்த விவகாரத்தில் முதல்வர் அலுவலகம் மற்றும் முதல்வரின் மீது கவனம் திரும்பியுள்ளது.
இந்த உரையாடல் மூலம் அதிகாரமட்டத்தில் நடந்த ஊழல் ரகசியங்களும், யார் யார் ஈடுபட்டு இருந்தார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.