Rajasthan: அரசு மருத்துவமனையில் புகுந்த தெருநாய்கள் கடித்து குழந்தை பலி

By SG BalanFirst Published Mar 1, 2023, 12:23 PM IST
Highlights

ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் புகுந்த தெருநாய்கள் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் கடித்து கொன்றன.

ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் புகுந்த நாய்கள் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை கவ்விச் சென்று கடித்துக் குதறியதில் அந்தக் குழந்தை பலியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள ஜவாய்பந்த் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர குமார். காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் உடல்நல குறைவு ஏற்பட்டு சிரோஹி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது மனைவி ரேகாவும் மூன்று குழந்தைகளும் அந்த மருத்துவமனையிலேயே வந்து தங்கினர்.

திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த  மூன்று தெருநாய்கள் ரேகாவுடன் தூங்கிக்கொண்டிருந்த அவரது பச்சிளம் குழந்தையை கடித்து இழுத்துத் சென்றுவிட்டன. பிறந்த ஒரு மாதமே ஆன அந்தப் பிஞ்சு குழந்தை அலறி அழும் சத்தம் கேட்டதும் வார்டில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டனர்.

Stray Dog Attack: தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் பலி; நெஞ்சைப் பிளக்கும் சிசிடிவி காட்சிகள்!

குழந்தையை நாய்கள் கடித்து இழுத்துச் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே நாய்களை அச்சுறுத்தி விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவை குழந்தையை அங்கிருந்து இழுத்துச் சென்றுவிட்டன. நாய்கள் கடித்ததில் கால், முகம் மற்றும் கை என பல இடங்களிலும் படுகாயம் அடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழிந்தது.

குழந்தையை நாய்கள் இழுத்துச் சென்று கொன்றதை அறிந்து மருத்துவமனைக்கு வந்த கொத்வாலி காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் குழந்தையின் இறப்புக்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவமனை வார்டுக்குள் தெருநாய்கள் சுதந்திரமாக சுற்றிவருவதால் அங்குள்ள நோயாளிகளையும் மருத்துவப் பணியாளர்களையும் அச்சுறுத்தி வருகின்றன என்று அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Stray Dogs: தெருநாய்க்கு உணவு கொடுப்பதை தடுத்தவரை கொடூரமாகக் கடித்து வைத்த நாய் பிரியர்!

click me!