நாட்டில் 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. தமிழ்நாட்டிற்கு எத்தனை..?

By Ramya s  |  First Published Apr 27, 2023, 12:38 PM IST

நாட்டில் மேலும் 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 


இந்தியா முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேலும் 157 அரசு நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 1,570 கோடி செலவில் இந்த கல்லூரிகள் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா  தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,700 நர்சிங் பட்டதாரிகள் சேர்க்கப்படுவார்கள் என்றும், ஒவ்வொரு செவிலியர் கல்லூரிக்கும், 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தார். நாட்டி 40% இந்திய நர்சிங் கல்லூரிகள் 4 தென் மாநிலங்களில் இருப்பதால் நாட்டில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது என்றும், மறுபுறம், நர்சிங் கல்லூரிகள் இல்லாத 13 மாநிலங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

Tap to resize

Latest Videos

உதாரணமாக பீகாரில், 2 அரசு நர்சிங் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இனி, பீகாரில் 8 நர்சிங் கல்லூரிகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ உத்தரபிரதேசத்தில் தற்போது 10 அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ள நிலையில், ராஜஸ்தான் 11, மத்திய பிரதேசம் 11, மற்றும் ஜார்கண்ட் 1 நர்சிங் கல்லூரிகள் உள்ளன. ஆனால் இனி, புதிய கொள்கையின் கீழ், இந்த மாநிலங்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் உள்ள அளவுக்கு நர்சிங் கல்லூரிகள் கிடைக்கும்.

இதையும் படிங்க : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்..? நாயின் கணிப்பு உண்மையாகுமா..?

எனவே இப்போது, அமைச்சரவை ஒப்புதலுடன், உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும், அங்கு 27 புதிய நர்சிங் கல்லூரிகள் வரும். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (23), மத்தியப் பிரதேசம் (14) நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் புதிதாக தலா 11 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.

இந்த முயற்சியானது சுகாதாரத் துறையில் உள்ள புவியியல் மற்றும் கிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நர்சிங் கல்லூரிகளை நிறுவுவது, சுகாதாரத் துறையில் தகுதியான மனித வளங்கள் கிடைப்பதற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.

மருத்துவக் கல்லூரிகளுடன் இந்த நர்சிங் கல்லூரிகள் இணைந்திருப்பது, தற்போதுள்ள உள்கட்டமைப்பு, திறன் ஆய்வகங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் ஆசிரியர்களை உகந்த முறையில் பயன்படுத்த அனுமதிக்கும்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த பிப்ரவரியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கும் திட்டத்தை முன்வைத்தார். இங்கிலாந்தில் 24,000 இந்திய செவிலியர்கள் உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் 20,000 செவிலியர்கள் பணியாற்றுவதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவில் 16,000 செவிலியர்கள் உள்ளனர், ஆஸ்திரேலியாவில் 12,000 மற்றும் கனடாவில் 5,000 செவிலியர்கள் உள்ளனர் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

நாட்டில் வளர்ந்து வரும் சுகாதார வசதிகளின் அடிப்படையில் பிஎஸ்சி நர்சிங் தேவை அதிகரித்து வருவதாக அமைச்சர் கூறினார். எனவே உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்ய புதிய கல்லூரிகள் திறக்கப்படும்," என்று கூறியிருந்தார். 

நாட்டில் 1 லட்சத்து 6 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள நிலையில், 1.18 லட்சம் பிஎஸ்சி நர்சிங் இடங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் இடங்களை உயர்த்தியுள்ளது. 2014க்கு முன் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளில் தற்போது 660 ஆக கணிசமான அளவு 71% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல்.. முக்கிய எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு படையினர்.
 

click me!