Karnataka election 2023: கர்நாடகாவில் பாஜக வரலாற்று வெற்றி பெறும்: தொண்டர்களுக்கு உற்சாகமூட்டிய பிரதமர் மோடி!!

By Dhanalakshmi G  |  First Published Apr 27, 2023, 11:23 AM IST

கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. தலைவர்களின் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. 50 லட்சம் பாஜக தொண்டர்கள் முன்பு இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் டெல்லியில் இருந்து கலந்துரையாடினார். 


தொண்டர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, பாஜக இரட்டை எஞ்சின் அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி, பாஜகவை வெற்றி பெறச் செய்ய பூத் அளவில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொண்டர்களிடம் நேரடி உரையாடலில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. தொடக்கவுரை ஆற்றிய பின்னர், தொண்டர்களின் கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.  தனது உரையில், ''பசவேஸ்வரரின் புனித பூமி கர்நாடகா. ஒவ்வொரு பூத்திலும் செயல்பாட்டாளர்களின் உழைப்பால் கர்நாடகாவில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் உங்களை சந்திக்க இருக்கிறேன். கர்நாடக மக்களின் ஆசிர்வாதம் பெற வருகிறேன். எந்த பகுதிக்கு சென்றாலும் பாஜக தலைவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இது பாஜக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

Tap to resize

Latest Videos

கர்நாடகம் மொழி, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றால் செழிப்படைந்துள்ளது. மேலும் தத்துவம் என்று வரும்போது அந்த மாநிலத்துடன் யாரும் போட்டியிட முடியாது. சமூகத்தின் தத்துவமும் வளர்ச்சியும் ஒன்றாக இணைந்து செல்கின்றன. முதல் எய்ம்ஸ் மருத்துவமனை 1956 இல் தொடங்கியது. ஆனால் அடுத்தது எப்போது தொடங்கியது? அதுபற்றி காங்கிரஸ் எதுவும் கூறாது. நாங்கள் வந்ததும், எய்ம்ஸை மூன்று மடங்கு உயர்த்தினோம். இரட்டை எஞ்சின் வலிமை உள்ளதா? இல்லையா? என்பதை நீங்களே எங்களிடம் கூறுங்கள்?. வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்"' என்றார். 

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்..? நாயின் கணிப்பு உண்மையாகுமா..?

''அடுத்த 10 நாட்களில் பாஜக வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்று ஷிமோகாவைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த மோடி, ''நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பூத் அளவில் வெற்றி பெற, உங்கள் பூத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் கொண்ட குழுவை உருவாக்கவும். கர்நாடகாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, மத்திய பாஜக மற்றும் மாநில பாஜக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த விவரங்கள் உங்களது மொபைலில், டைரியில், மனதிலும் இருக்க வேண்டும். இந்த தகவலை உங்கள் குழுவிற்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும். வீடு வீடாகச் சென்று நலம் விசாரித்து, ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டுவிட்டு, பாஜக இரட்டை எஞ்சின் அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

இது எங்க குடும்பத்துக்கு போதாத காலம்! பிரியங்கா காந்தி கவலை

''உலகின் பல நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பலர் பின்வாங்கி உள்ளனர். ஆனால் இவை அனைத்தையும் இந்தியா எதிர்கொண்டது என்பதை விளக்குங்கள். விவசாயிகளுக்கு பாஜக அளித்துள்ள அடிப்படை வசதிகள் மற்றும் அவர்கள் பெற்ற பயன்கள் குறித்து விளக்கவும். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வறுமையில் இருந்து விடுவித்து வேலை வாய்ப்பை வழங்குவோம். இதற்காக இளைஞர் அணியை பாஜக உருவாக்கும். இந்தியாவின் ஸ்டார்ட்அப் துறையில் பெங்களூரு முன்னணியில் உள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களை பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்'' என்றார். 

''இரட்டை இன்ஜின் அரசு என்றால் என்ன? இதனால் கர்நாடகாவிற்கு என்ன லாபம்? என்ற மற்றொரு தொண்டரின் கேள்விக்கு, ''ஒவ்வொரு வீட்டிற்கு தண்ணீர் கிடைக்கிறது. இதற்கு காரணம் மத்தியில்  பாஜக, மாநிலத்தில் பாஜக அரசு இருப்பதுதான். மத்திய அரசின் எந்த திட்டமானாலும் எளிதாக கர்நாடகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கிசான் சம்மான் நிதியில் கர்நாடக அரசு 4,000 ரூபாய் சேர்த்து மொத்தம் 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. வீடு ஒதுக்கீட்டில் கர்நாடகா மக்கள் பயன் அடைந்துள்ளனர்.  சாலை பணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதற்கு மாநில அரசு நிலம் ஒதுக்க வேண்டும். இது இரட்டை என்ஜின் அரசாங்கத்தால் தான் முடியும்'' என்றார்.

காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் இலவச அறிவிப்பு செய்கின்றன. இது நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வளமான மற்றும் தகுதியான பாரதத்திற்காக பாஜக உழைக்கிறது. காங்கிரஸ் என்றால் ஊழல் கியாரெண்டி கட்சி ''என்றார் மோடி. 

''பாஜக ஆட்சி அமைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவில் எந்த மாதிரியான முன்னேற்றத்தைக் காணலாம்? என்று மற்றொரு தொண்டர் கேள்வி எழுப்பினார். பதிலளித்த மோடி,  ''அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு அமிர்த காலாக இருக்கும். பாஜக ஏற்கனவே 25 ஆண்டு வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளது. 1920க்குப் பிறகு, மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் இந்தியாவில் சுதந்திரப் போராட்ட இயக்கம் தீவிரமடைந்தது. 25 ஆண்டுகால தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு 1947இல் சுதந்திரம் கிடைத்தது. இப்போது அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானவை. இந்தியாவின் வளர்ச்சி கர்நாடகாவின் வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம். உலகமே இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக பார்க்கிறது. அடுத்த சில வருடங்களில் பல நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரவுள்ளன. இதனால் கர்நாடகாவுக்கு அதிக பலன் கிடைக்கும். நாம் பல உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதற்கு இரட்டை எஞ்சின் அரசாங்கம் தேவை'' என்றார். 

click me!