"புறவாசல் வழியாக அவசரச் சட்டம் பிறப்பிப்பு" - மோடி அரசு மீது சீதாராம் யெச்சூரி தாக்கு

First Published Dec 28, 2016, 5:57 PM IST
Highlights


ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை நேருக்கு நேர் சந்திக்க திராணியில்லாமல், புறவாசல் வழியாக மோடி தலைமையிலான அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்சீதாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவசரச் சட்டம்

ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மத்திய அரசு நேற்று அவசரச்சட்டத்தை பிறப்பித்தது. இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு பின், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை 10 எண்ணிக்கைக்கு மேல் வைத்து இருந்தால், 4 ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயாலாளர் சீதா ராம் யெச்சூரி டெல்லியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

ராஜினாமா தேவையில்லை

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் கூறுவதுபோல், பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் உடன்பாடில்லை அதேசமயம், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்பதை விளக்க வேண்டும்.

ஒற்றுமை

எதிர்க்கட்சிகளுக்கு இடையே எந்த விதமான முரண்பாடுகளும், கருத்து வேறு பாடுகளும் இல்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோடு நட்புறவு தொடர்கிறது, ஒற்றுமையாக இருக்கிறோம். ஆனால், எந்த விசயத்திலும் முறையாக ஆலோசித்து, ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.

ஏற்க முடியாது

ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பூர்வமாக ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு கொண்டு வரப்படவில்லை.  நாடாளுமன்றம் நடந்து கொண்டு இருக்கும் போது இது குறித்து ஏன் பேசவில்லை, சட்டத்திருத்தம் கொண்டு வந்து இருக்க வேண்டும்.

புறவாசல்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. குளிர்காலக்கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சந்திக்க பயந்து கொண்டு, புறவாசல் வழியாக அவசரச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

அடுத்த அதிர்ச்சி

இனி இம்மாதம் 30-ந்ேததி மோடி மேலும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு புதிய அச்சத்தை உண்டாக்கப்போகிறார். அந்த அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். போராட்டத்தின் மூலம் இடதுசாரிகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறோம். ஒற்றுமையின் மூலமே ரூபாய் நோட்டுவிவகாரத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!