டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தன்னுடைய கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமலாக்கத்துறையிடம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் மே 7ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
அன்றைய தினம், தேர்தல் நேரம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாகவும், சிறையில் இருந்தபடியே கோப்புகளில் அவர் கையொப்பமிடுவது தொடர்பாகவும் என இரண்டு முக்கிய விஷயங்களை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது. இந்த மனுவானது மீண்டும் மே 7ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது, மேற்கண்ட அம்சங்கள் குறித்து தயாராக வருமாறு அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
“நாங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கலாம் அல்லது வழங்காமல் இருக்கலாம். ஆனால் இரு தரப்பும் ஆச்சரியப்படக்கூடாது.” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
தமிழ்நாட்டில் முழு அளவில் பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்!
நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என்று கருத வேண்டாம் என்று இரு தரப்புக்கும் தெரிவித்த நீதிபதிகள், டெல்லி முதல்வருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால் அதற்கான நிபந்தனைகள் குறித்து தெரிவிக்குமாறும், முதல்வர் பதவியை கருத்தில் கொண்டு ஏதேனும் கோப்புகளில் கெஜ்ரிவால் கையெழுத்திட வேண்டுமா என்பதை பரிசீலிக்குமாறும் அமலாக்கத்துறைய கேட்டுக் கொண்டனர்.
டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இருப்பினும், முதல்வர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்யவில்லை. முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கிடையே, அவரது ஜாமீன் மனுக்கள் அனைத்தும் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தனது கைது எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.