“வேதனையான சம்பவம்.. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” பிரதமர் மோடி எச்சரிக்கை

By Ramya sFirst Published Jun 3, 2023, 6:24 PM IST
Highlights

ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது வேதனையான சம்பவம் என்றும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு விரிவான ஏற்பாடு செய்துள்ளது என்றும் நரேந்திர மோடி கூறினார்.

இந்தியாவின் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர்உயிரிழந்தனர். சுமார் 900 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி விபத்து நடந்த  இடத்தில் நிலைமையை ஆய்வு செய்தார். பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் IAF ஹெலிகாப்டர் மூலம் விபத்துக்குள்ளான இடத்திற்குச் சென்ற மோடி, ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில், நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை மோடி ஆய்வு செய்தார். மேலும் உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

கேபினட் செயலர் மற்றும் சுகாதார அமைச்சரிடம் பேசி, காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். உயிரிழந்த குடும்பங்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் தொடர்ந்து கிடைக்கவும் சிறப்பு கவனம் எடுக்கப்பட வேண்டும் என்றும் மோடி கூறினார்.

பின்னர் காயமடைந்த பயணிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற மோடி அங்கு சிகிச்சை பெற்று வருவோரு ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி“இது ஒரு வேதனையான சம்பவம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இது ஒரு தீவிரமான சம்பவம், ஒவ்வொரு கோணத்திலும் விசாரணைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. காயமடைந்தவர்களை நான் சந்தித்தேன், ” என்று தெரிவித்தார்.

பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் மூன்று தனித்தனி தடங்களில் விபத்துக்குள்ளானது. இரண்டு ரயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டு பலத்த சேதமடைந்தன. மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, ரயில் விபத்து தொடர்பாக நிலைமையை ஆய்வு செய்ய மோடி ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.

click me!