சபாநாயகர் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே.சுரேஷும் போட்டியிடுகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் எந்த கட்சியும் வெற்ற பெறாததால் கூட்டணி துணையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. 2014, 2019-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டிலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராகி உள்ளார்.
இந்த நிலையில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வராததால் முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது.என்.டி. ஏ தனது வேட்பாளராக பாஜக எம்பி ஓம் பிர்லாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் கே சுரேஷ் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். அதன்படி சபாநாயகர் தேர்தலில் போட்டியிட கே.சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் என்.டி.ஏ கூட்டணியின் ஓம் பிர்லா மற்றும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கே.சுரேஷ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
undefined
முன்னதாக மக்களவை சபாநாயகர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை அரசாங்கம் நியமித்தது. அதன்படி ராஜ்நாத் சிங் நேற்றிரவு இந்தியா கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று இதுகுறித்து பேசிய போது தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு ராஜ்நாத் சிங்கிடம் இருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அப்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கார்கே கோரிக்கை விடுத்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும் "ராஜ்நாத் சிங் மல்லிகார்ஜுன் கார்கேவை அழைத்தார், அவர் சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டார். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் என்.டி.ஏ கூட்டணியின் சபாநாயகரை நாங்கள் ஆதரிப்போம், ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு ராஜ்நாத் சிங் கார்கேவை திரும்ப அழைப்பதாக கூறினார்., ஆனால் அவர் அதை இன்னும் செய்யவில்லை" என்று ராகுல் காந்தி கூறினார்.
இதனிடையே சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய குறி வைத்துள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. இதற்காக அக்கட்சிகள் பாஜகவுடன் நிபந்தனைகளை விதிப்பதாகவும் கூறப்பட்டது. எனினும் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கடந்த வாரம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் பதவியை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததாகவும் அதனை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் தொடர்பாக பாஜகவுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து சபாநாயகர் பதவியிலும் போட்டி நிலவுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அதிமுகவின் எம்.தம்பி துரையை துணை சபாநாயகராக பாஜக நியமித்தது. 2019-ம் ஆண்டு முதல் அந்த பதவி காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.