பணத்துக்கு அலையும் மும்பை; ஏ.டி.எம்., டோல்கேட்டில் நீண்ட வரிசை.... சில்லறை கிடைக்காமல் புலம்பும் மக்கள்

First Published Dec 4, 2016, 11:01 AM IST
Highlights


மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பையடுத்து, 3 வாரங்களாக நிறுத்தப்பட்டு இருந்த நெடுஞ்சாலை ‘டோல்கேட்’ கட்டணம் வசூல் மீண்டும் நேற்று தொடங்கியது. இதனால், டோல்கேட்டிலும், பணம் எடுக்க ஏ.டி.எம்.களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.

பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500,ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் இம்மாதம்  2-ந்தேதி வரைடோல்கேட் கட்டணத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டு இருந்த கட்டண வசூல் நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. இதனால், டோல்கேட்டில் கட்டணம் செலுத்த கார்கள், லகுரக , கனரக வாகனங்கள் என நீண்ட வரிசையில் நேற்று காத்து இருந்தன.

குறிப்பாக மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலை, சியான்-பன்வேல் சாலையில் ஆகியவற்றில் வாகனங்கள் அணிவகுத்து நின்று இருந்தன. வாகன ஓட்டிகள் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் டிஜிட்டல்பேமெண்ட் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருத்து. டோல்கேட்களில் போதுமான ‘ஸ்வைப்பிங்’ மெஷின்கள் இருந்தபோதிலும், சில்லறை தட்டுப்பாட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் தலையிட்டு, நெரிசலை குறைத்தனர்.

இடம் மாறிஇருக்கு; வரிசை மாறவில்லை

இது குறித்து முலுந்த் டோல்கேட்டில் இருந்த வாகன ஓட்டி அமின் சேக் என்பவர் கூறுகையில், “ கடந்த 20 நாட்களாக பணத்துக்காக ஏ.டி.எம்., வங்கி வாசலில் வரிசையில் நின்றேன். இப்போது, டோல்கேட்டில்வரிசையில் நிற்கிறேன். ரூ.2 ஆயிரம் நோட்டை டோல்கேட்டில் இருக்கும் ஊழியர்கள் உள்ளிட்ட யாருமே ஏற்க மறுக்கிறார்கள்'' என்றார்.

சில்லறை தட்டுப்பாடு

மும்பையின் புறநகரான தாகிசார் டோல்கேட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், “ மக்கள் பெரும்பாலும் ரூ.2 ஆயிரம் நோட்டையே கொடுக்கிறார்கள். ரூ.35 கட்டணத்துக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கும்போது தான் பிரச்சினை உருவாகிறது'' என்றார்.

அனைத்தும் தயார்

சாலைபராமரிப்பில் இருக்கும் ஐ.ஆர்.பி.நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ வாகன ஓட்டிகள் எளிதாக கட்டணம் செலுத்த ஸ்வைப்பிங் மெஷின்கள், டிஜிட்டல் பேமென்ட் வசதிகள், பாயின்ட்ஆப் சேல் மெஷின்களை 60 டோல்கேட்களில் ஏற்படுத்தி இருக்கிறோம். மேலும், வாகனங்கள் டோல்கேட்டில் காத்திருக்காமல் செல்லும் வகையில் ‘பாஸ்ட்டாக்’ ஸ்டிக்கர் கவுன்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன'' என்றார்.

இன்று விடுமுறை...

 வங்கிகளிலும், பெரும்பாலான ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லாததால்,  பணம் இருக்கும் ஒரு சில ஏ.டி.எம்.கள் முன், மக்கள் நீண்ட வரிசையில் பணம் எடுக்க நேற்று நின்றனர். இதற்கிடையே இன்று வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணத்தின் தேவை இன்னும் கூடுதலாகும்.

click me!