நிர்வாக எந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் மோடி - மாயாவதி கடும் குற்றச்சாட்டு

First Published Dec 27, 2016, 4:04 PM IST
Highlights


மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நிர்வாக எந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு  இருக்கும் நல்ல தோற்றத்தை அழிக்க முயற்சிக்கிறது என அந்த கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.

உத்தரப்பிரதேசம், தலைநகர் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது-

வீசி எறியவா?

எங்கள் கட்சியின் சார்பாக வங்கிக்கணக்கில் செய்யப்பட்டுள்ள அனைத்து டெபாசிட்களும் விதிமுறைகளின் படியே டெபாசிட்செய்யப்பட்டுள்ளது.  கட்சியின் ஒழுங்கு முறைக்கு கட்டுப்பட்டுதான் தொண்டர்களிடம் நன்கொடையை ரூபாய் தடை அறிவிப்புக்கு முன் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை இப்போது என்ன வீசி எறியச் சொல்கிறதா மத்திய அரசு?.

ரகசிய கூட்டு

சமாஜ்வாதிக் கட்சியுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் பாரதிய ஜனதா கட்சி ரகசிய உடன்பாடு செய்துள்ளது என்பதை நேற்று முன் தினம்நான் அம்பலப்படுத்தினேன். அதனால், விரக்தியில் பாரதிய ஜனதா அரசு, பகுஜன் சமாஜ் கட்சிக்கும், அதன் தலைவர் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கையை தூண்டிவிட்டுள்ளது.

நன்கொடை வசூல்

நாங்கள் வங்கியில் செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு இருக்கிறது. நாடுமுழுவதும் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களிடம் உறுப்பினர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. நாட்டின் எல்லைப்பகுதிகளில் வசூலான பணத்தை கொண்டு வருவதில் சிரமம் இருப்பதால், அந்த பணத்தை ஆயிரம் ரூபாயாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்யக் கொண்டு வந்தோம்.

நல்ல சகுணம்தான்

பாரதியஜனதா கட்சியின் எங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை ஒரு நல்ல சகுணம்தான். ஏனென்றால், கடந்த 2007ம் ஆண்டு இதேபோல,தாஜ்மாஹால் அருகே ஒட்டல் கட்டுவது தொடர்பான எனக்கு எதிராக சிக்கலை பாரதிய ஜனதா அரசு உருவாக்கியது. அந்த தேர்தலில் நான் அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தேன். அதேபோல, இந்த முறை எனக்கு எதிராக நடவடிக்கையை தொடங்கி இருப்பதால், அதை நல்ல சகுணமாகவே கருதுகிறேன்.

ரூபாய் நோட்டு தடை நடவடிக்கைபோல் இன்னும் சில கடினமான முடிவுகள் எடுத்தால், நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் மிக எளிதாக ஆட்சிக்கு வர உதவியாக இருக்கும்.

தலித் விரோதம்

பாரதியஜனதா உள்ளிட்ட மற்ற கட்சிகளும் தங்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து இருக்கின்றன. அதைப்பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டீர்கள். எங்களைக் குறிவைப்பது பாரதியஜனதா கட்சியின் தலித் விரோத, சாதி ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது.

வெளிப்படையா அறிவிக்க முடியுமா?

 நவம்பர் 8-ந் தேதிக்கு முன், கடந்த 10 மாதங்களாக பாரதிய ஜனதா கட்சியின் வங்கிக்கணக்கு டெபாசிட்டை வெளிப்படையாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருக்கிறதா?. பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் நேர்மையாக இருந்தால், கட்சியின் கணக்கை மக்களுக்கு அறிவியுங்கள். ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு முதன் முதலில் நாங்கள்தான் எதிர்த்தோம் என்பதற்காக இப்போது மோடி அரசால் பழிவாங்கப்படுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!