அடுத்த 3 மாதங்களுக்கு இந்தியாவில் கடுமையான வெப்பம் இருக்கும் என்றும், சில மாநிலங்கள் மோசமான பாதிப்பை சந்திக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு இந்தியாவில் கடுமையான வெப்பம் இருக்கும் என்றும், சில மாநிலங்கள் மோசமான பாதிப்பை சந்திக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, மத்திய இந்தியா, வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகள் அதிக வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறியுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் நாட்டில் அதிக வெப்பம் நிலவும் எனவும், மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் எனவும் வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இதுகுறித்து பேசிய போது “ நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10-20 நாட்கள் வெப்ப அலை எதிர்பார்க்கப்படுகிறது, இது 4 முதல் 8 நாட்களுக்கு சாதாரணமாக இருக்கும்.என்று தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், வெப்ப அலை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் " வெப்ப அலை தொடர்பாக மாநில அரசுகளுடன் இரண்டு நாள் கூட்டம் நடத்தினோம், அதற்கான ஆலோசனையை வழங்கினோம்," என்று அவர் கூறினார்.
மோசமான தாக்கத்தை எதிர்கொள்ளும் மாநிலங்கள் எவை?
குஜராத், மத்திய மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை வெப்ப அலைகளின் மோசமான தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய தென்னிந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வெப்ப அலை நிலைமைகள் குறித்து ரிஜிஜு கூறுகையில், "எங்கள் கணிப்புகளின்படி, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் உட்பட நாட்டின் மிகப்பெரிய பகுதி வெப்ப அலையால் பாதிக்கப்படும்" என்றார்.
கச்சத்தீவு பிரச்சினைக்கு இடையே இந்திய பகுதிகளுக்கு பெயர் வைத்து 4ஆவது லிஸ்ட் வெளியிட்ட சீனா!
ஏப்ரல் மாதத்தில் மேற்கு இமாலயப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் இயல்பிலிருந்து இயல்பிற்குக் குறைவான அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மத்திய இந்தியாவிலும் அதை ஒட்டிய வட சமவெளி மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் வழக்கமான வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ஒடிசா, மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலைகளின் மோசமான தாக்கத்தை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.