Lucknow : லக்னோ பகுதியை சேர்ந்த சுமார் 38 வயதான நபர் ஒருவர் தனது 32 வயது மனைவி, 6 மற்றும் 3 வயது நிரம்பிய இரண்டு குழந்தைகளைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது மனைவி, மற்றும் 2 குழந்தைகளை கொன்று, சுமார் மூன்று நாட்கள் அவர்கள் உடல்கள் கிடந்த அதே அறையில் உறங்கிவிட்டு, தினமும் வழக்கம் போல் தனது வேலையை பார்க்க சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த உடல்களில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து பல்ராம்பூர் மாவட்டத்தின் ரத்தன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம் லகன் கவுதம், லக்னோவின் பிஜ்னோர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சர்வான் நகர் பகுதியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கடந்த மார்ச் 15ம் தேதி முதல் கவுதம் தனது மனைவி ஜோதி (32), மகள் பயல் (6), மகன் ஆனந்த் (3) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். ஜோதிக்கு யாரோ ஒருவருடன் முறைகேடான தொடர்பு இருப்பதாக கௌதம் சந்தேகித்ததாகவும், அந்த குழந்தைகள் தன்னுடைய குழந்தைகளா என சந்தேகித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
14 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை கல்யாண்பூரில் பணிபுரிந்து வந்த ஜோதி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார் அந்த நபர். பின்னர் இருவரும் லக்னோவுக்கு குடியேறியுள்ளனர். சரோஜினி நகர் கவுரி பஜார் பகுதியில் கொத்தனார் வேலை கிடைத்ததை அடுத்து, அங்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
ஆனால் பின்னர், அவர்கள் லக்னோவின் பிஜ்னூரில் உள்ள சர்வான் நகருக்கு மாறினார்கள்" என்று தெற்கு கூடுதல் டிசிபி ஷஷாங்க் சிங் கூறினார். "மூன்று நாட்களுக்கு முன்பு (வியாழன் அன்று) அந்த தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது அந்த நபருக்கு அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது கெளதம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் அன்று இரவு, ஜோதி தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மேலும் லகான் தனது கைகளால் பாயல் மற்றும் ஆனந்த் ஆகியோரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மறுநாள் காலை அவர் கதவை பூட்டிவிட்டு சரோஜினி நகரின் சோராமாவ் பகுதியில் வேலைக்குச் சென்றார்" என்று சிங் கூறினார். சந்தேகம் வராமல் இருக்க, அடுத்த மூன்று நாட்களுக்கும் அதே போல தினமும் காலை வேளைக்கு சென்று திரும்பியுள்ளார்.
போலீசார் அறையின் பூட்டை உடைத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தெற்கு டி.சி.பி., தேஜ் ஸ்வரூப் சிங், ஏ.டி.சி.பி., ஷஷாங்க் சிங், ஏ.சி.பி., கிருஷ்ணா நகர் வினய் திவேதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, நிலைமையை பார்வையிட்டனர்.
பக்கத்துவீட்டு கதவை தட்டி பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த ஆசாமி; அதிர்ச்சியில் அலறிய குடும்ப பெண்