
இமாசலப்பிரதேசத்தில் இம்மாதம், அதாவது நவம்பர் 12 ஆம் தேதி, சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று மாண்டி மாவட்டத்தில் இருக்கும் சுந்தர் நகரில் பிரதமர் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். முன்னதாக சுந்தர் நகருக்கு சென்றிருந்த பிரதமர் மோடிக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி பேசுகையில், ''மீண்டும் இமாசலப்பிரதேச மக்கள் பாஜக ஆட்சியை அமைக்க முடிவு செய்துவிட்டனர். மலை மாநிலமான இமாசலப்பிரதேசத்துக்கு விரைவான முன்னேற்றத்தைக் கொடுக்க நிலையான ஆட்சி தேவை. வரும் நவம்பர் 12ஆம் தேதி மாநிலத்தில் நடக்கும் தேர்தல் வரும் ஐந்தாண்டுகளை மட்டும் நிர்ணயிப்பதாக இருக்காது. மாநிலத்தின் ஒவ்வொரு வாக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிப் பயணத்துக்கானது.
"கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியா 75வது சுதந்திர தினத்தை நிறைவு செய்து இருந்தது. இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, இமாசலப்பிரதேசமும் மாநிலம் உருவான 100வது ஆண்டை நிறைவு செய்யும். ஆதலால்தான், இனிவரும் அடுத்த 25 ஆண்டுகளும் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிடுகிறேன். இமாசலப்பிரதேசத்தின் இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் இதை நன்றாக புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
மாநில மக்களுக்கு நன்றாகத் தெரியும், நிலையான, சாதுவான, சமநிலை ஆட்சியை கொடுக்கக் கூடியது பாஜக என்று. ஆதலால்தான், மீண்டும் மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்கு மக்கள் தீர்மானித்துள்ளனர்''என்றார்.
யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!
காங்கிரஸ் பாஜக போட்டி:
இமாசலப்பிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் பேரணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில், மாநிலத்தில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் மல்லிகார்ஜூனே கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பிரச்சாரம்:
பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 12 முறைக்கும் மேல் இமாசலப்பிரதேசத்துக்கு பிரதமர் மோடி பயணம் செய்துள்ளார். சமீபத்திலும், உனா, சம்பா, பிலாஸ்பூர், குலு ஆகிய இடங்களில் பேரணி நடத்தியுள்ளார். இன்று சுந்தர் நகர் மற்றும் சோலன் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் பிரதமர் மோடி வரும் 9ஆம் தேதி ஷாபூர், காங்ரா, சுஜன்பூர், ஹமிர்பூர் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இவரைத் தவிர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விலைவாசி உயர்வு:
இந்த தேர்தல் பாஜகவுக்கு கடுமையானதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு உருவாக்குதல், பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
சவாலான மாண்டியா மாவட்டம்:
இந்த தேர்தலில் மாண்டி மாவட்டத்தில் இருக்கும் பத்து சட்டப்பேரவை தொகுதிகள் பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாவட்டத்தில் இருக்கும் பத்து இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வராக இருந்த வீர்பத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் வெற்றி பெற்று இருந்தார். இதனால் மாண்டி மாவட்டம் இரண்டு கட்சிகளின் போராட்டக் களமாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கோட்டை:
மாண்டி மாவட்டம் காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்தது. நடப்பாண்டில் கடந்த மே மாதம், தனது 92வது வயதில் காலமான காங்கிரஸ் தலைவர் சுக்ராமின் மாவட்டமாக மாண்டி திகழ்ந்து வந்தது. இவரது மகன் அனில் சர்மாவை மாண்டி சதர் தொகுதியில் பாஜக நிறுத்தியுள்ளது. இதே இடத்தில் இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி கவுல் சிங் தாக்கூரின் மகள் சம்பா தாகூரை நிறுத்தியுள்ளது.
அரசியல் சாணக்கியன்:
இந்த முறைதான் சுக்ராம் இல்லாமல் இமாசலப்பிரதேசம் தேர்தலை சந்திக்கிறது. இவர் காங்கிரஸ் கட்சியின் சாணக்கியர் என்றே அழைக்கப்பட்டு வந்தார். இவர் இல்லாததும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. சுக்ராம் மாண்டி சதர் தொகுதியில் 13 முறை போட்டியிட்டு ஒரு முறை கூட தோற்றதில்லை. ஒரே ஒரு முறை மக்களவை தேர்தலில் 1989ஆம் ஆண்டில் மகேஸ்வர் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சதர் தொகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் அனில் சர்மாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சம்பா தாகூர் தோல்வியை சந்தித்தார். இந்த முறையும் இவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.