
Ramadoss Anbumani clash : பாமகவில் தந்தை மகன் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது. ராமதாஸ் ஒருபக்கம் அன்புமணி மறு பக்கம் என கட்சியில் பிரிந்துள்ளனர். இதன் காரணமாக அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை அடுத்தடுத்து நீக்கி வருகிறார் ராமதாஸ். ஆனால் ராமதாஸூக்கு நிர்வாகிகளை நீக்க அதிகாரம் இல்லையென அன்புமணி கூறிவருகிறார். மேலும் அன்புமணி மீது பல பகீர் குற்றச்சாட்டுக்களையும் ராமதாஸ் தெரிவித்தார். இந்த நிலையில் தனக்கான ஆதரவுகளை திரட்டும் வகையில் அன்புமணி ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறார்கள். இந்த கூட்ட நிகழ்வுகளில் அழைப்பிதழில் ராமதாஸ் புகைப்படத்தை போடாமல் தவிர்க்கிறார்.
அதே நேரம் நிகழ்ச்சிகளில் தந்தையிடம் மன்னிப்பு கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கு ராமதாஸோ செவிசாய்ப்பதாக இல்லை. இப்படி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியில் பாமக கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100 சதவீதம் பொய்யானது. பாமக கட்சிக்காகவும் வன்னியர் சமுதாயத்திற்காகவும் எனது மனம் சுமையை சுமந்து கொண்டு உள்ளது என தெரிவித்தார். பாமகவில் கட்சித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புகள் தொண்டர்களால் கொடுக்கப்பட்டவை.. உங்களைப் போன்று நானும் தொண்டன் தான். பாமகவை அடுத்த கட்டத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தான் என்னுடைய நோக்கம். தொண்டர்கள் கொடுத்த தைரியம் தான் அடுத்த களத்திற்கு தயாராக செய்து கொண்டிருக்கிறோம்.
பாமகவில் உள்ள கட்சி பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்; நீங்கள் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவது குறித்து தான் பார்க்க வேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி ஆகிய இருவரும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் விரைவு பூரணமாக குணமடைய வேண்டும் உடல்ரீதியாக, மனரீதியாக பூரணமாக குணமடைய வேண்டும் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என கிண்டல் செய்யும் வகையில் பேசினார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி, சேலம் மாவட்டத்தில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் திமுக வென்றுள்ளது. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது என தெரிவித்தார். திமுக ஆட்சியில் கொள்ளை அடித்த பணத்தை தான் தமிழக மக்களுக்கு கொடுத்து கடந்த முறை ஆட்சிக்கு வந்தார்கள். மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்று நம்பிக்கையில் உள்ளார்கள்.
திமுக கொடுத்த கொடுத்த பணம் மீண்டும் டாஸ்மாக்கு செல்கிறது. திமுக ஆட்சிக்கு தான் செல்கிறது. இதைப் பற்றி மக்களிடம் சொல்லுங்கள் என பாமக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாசிடம் பாமகவில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி கூறி வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய் என்று பதிலளித்தார்.