
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் செல்லவிருந்த ஆக்சியம்-4 (Axiom-4) விண்வெளிப் பயணம், ஏற்கனவே பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஜூன் 19 அன்று புறப்பட திட்டமிடப்பட்டிருந்த இந்தத் திட்டம், தற்போதைய நிலவரப்படி, ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாகப் புறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் Zvezda சேவை தொகுதியின் (Zvezda service module) பின்புறப் பகுதியில் சமீபத்தில் பழுது ஏற்பட்டுள்ளது எனவும், அதனை சரிசெய்வதற்கு அவகாசம் வழங்க இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் நாசா குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர் தடங்கல்கள்:
இந்த விண்வெளிப் பயணம், முதலில் மே 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஃபால்கன் 9 ராக்கெட் பூஸ்டர்களில் திரவ ஆக்ஸிஜன் கசிவு கண்டறியப்பட்டதாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் பழமையான ரஷ்ய தொகுதியில் (Russian module) மேலும் கசிவுகள் குறித்த கவலைகள் எழுந்ததாலும், ஜூன் 8, பின்னர் ஜூன் 10 மற்றும் 11 என பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) எக்ஸ் தளத்தில் ஒரு பதிவின் மூலம் இந்த பயண ஒத்திவைப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
பெக்கி விட்சன் தலைமை:
ஆக்சியம்-4 வணிகப் பயணத்திற்கு விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமை தாங்குகிறார். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விமானியாகவும், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் காபு (Tibor Kapu) மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னியெவ்ஸ்கி (Slawosz Uznanski-Wisniewski) ஆகியோர் மிஷன் நிபுணர்களாகவும் உள்ளனர். இந்த குழு புளோரிடாவில் உள்ள NASA-வின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் புறப்படும்.
குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, இந்திய விமானப்படையின் தற்போதைய பைலட் மற்றும் இஸ்ரோவின் சமீபத்திய விண்வெளி வீரர் ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் ஒரு சில இந்தியர்களில் சுக்லாவும் ஒருவர் ஆவார். அவர் இந்தியாவால் வடிவமைக்கப்பட்ட ஏழு அறிவியல் சோதனைகளை மேற்கொள்வார், மேலும் NASA-வுடனான கூட்டு ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுவார்.
வெற்றிகரமான பயணத்தை உறுதிப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஆக்சியம் ஸ்பேஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. Ax-04 மிஷன், குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு பரந்த வணிக அணுகலை செயல்படுத்துவதற்கும், உலகின் முதல் வணிக விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கும் ஆக்சியம் நிறுவனத்தின் நீண்டகால தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.