கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பஞ்சரத்ன யாத்திரையில் எஞ்சிய உணவைத் தின்ற 15 கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பேரணியின்போது வழங்கிய உணவில் எஞ்சியதை உட்கொண்ட சுமார் 15 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
கர்நாடக மாநிலத்தின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள யெராகோல் கிராமத்தில் மார்ச் 24ஆம் தேதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் பஞ்சரத்ன யாத்திரை என்ற தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. குர்மித்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் அக்கட்சியின் தலைவர் ஹெச். டி. குமாரசாமியின் தீவிர விசுவாசியுமான ஷரணகவுடா கந்தகூர் தன் செல்வாக்கைக் காட்டும் வகையில் பெரும் கூட்டத்தைக் கூட்டினார்.
250 ஆண்டுகள் சிறை தண்டனை! ரூ.4000 கோடி சிட்பண்ட் மோசடி வழக்கில் அதிரடி தீர்ப்பு
யாத்திரைக்குப் பிறகு, கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. எஞ்சிய உணவு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் கொட்டப்பட்டது. பின் கிராம விவசாயிகளால் மேய்ச்சலுக்கு விடப்பட்ட 30-35 கால்நடைகள் அப்பகுதிக்கு வந்துள்ளன. விவசாய நிலத்தைக் கடக்கும்போது கொட்டப்பட்டிருக்கும் உணவை அவை உண்டிருக்கின்றன.
அந்தக் கால்நடைகள் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை. வீங்கிய வயிற்றுடன் இருந்த கால்நடைகளைப் பார்த்த அப்பகுதியினர் சிலர் கால்நடைத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் ராஜு தேஷ்முக் மருத்துவர்களுடன் கிராமத்திற்குச் விரைந்தார்.
சனிக்கிழமை காலை 8:45 மணியளவில் கால்நடை மருத்துவக் குழு கிராமத்துக்குச் சென்றது. பாதிக்கப்பட்ட மாடுகளைப் பரிசோதனை செய்ததில், 9 கால்நடைகள் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. அவை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவர்கள் மாதிரிகளை எடுத்துச் சோதித்ததில் உணவில் விஷம் கலந்ததால் மாடுகள் மரணம் அடைந்திருப்பது தெரியவந்தது.
குடும்பத் தலைவிகள் கவனத்திற்கு! ரூ.1000 உரிமைத் தொகை பெற இதைச் செய்யவேண்டுமாம்!
கொட்டப்பட்ட சோறு கெட்டுப்போயிருந்ததாகவும் அதனை ஒவ்வொரு கால்நடையும் சுமார் 5-6 கிலோ வரை உண்டிருக்கின்றன எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட 6 கால்நடைகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துவிட்டன. இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
மேலும் 20 கால்நடைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றன. ஆனால், அவை அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டன என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து விவசாய நிலத்தில் கொட்டப்பட்ட உணவு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது. இனி அந்தப் பகுதிக்குவரும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கிராம பஞ்சாயத்து தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ISRO: 36 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் எல்விஎம் 3 ராக்கெட்