சிட் பண்ட் மூலம் 4000 கோடி ரூபாய் மோசடி செய்த 5 பேருக்கு மத்தியப் பிரதேச நீதிமன்றம் 250 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
20 மாநிலங்களில் உள்ள 35 லட்சத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்களிடம் ரூ.4,000 கோடி ஏமாற்றியதற்காக சிட் ஃபண்ட் நிறுவனத்தின் இயக்குநருக்கு 250 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள செஹோர் மாவட்ட நீதிமன்றம் இந்த் தீர்ப்பை அளித்துள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் மிக நீண்ட சிறை தண்டனை இது என்று கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட பாலாசாகேப் பாப்கர், சாய் பிரசாத் குழும நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இவருடன், தந்தை மற்றும் மகன் உட்பட 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த நிறுவனம் 2009 நவம்பர் 17 முதல் 2016 மார்ச் 13 வரை கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களிடம் சிட் ஃபண்டில் சேர்ந்தால் பணத்தை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்தது. குற்றவாளியான பாப்கர் பால் விற்பனையாளராக இருந்து, பின்னர் மஹாராஷ்டிரா கிராமப்புறங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் மூலம் ஊறுகாய், பப்பாளி மற்றும் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலை நடத்திவந்தவர். இவர் ரியல் எஸ்டேட் திட்டங்கள் மூலம் 18% ஆண்டு வருவாய் கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளித்தது முதலீடுகளைப் பெற்றுள்ளார். ஆனால், எந்த கட்டுமானத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
பணம் இரு மடங்காகக் கிடைக்கும் என்ற தகவல் பரவியதால் 20 மாநிலங்களைச் சேர்ந்த பலர் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடைய நான்கு நிறுவனங்களை மூடுமாறு அவற்றின் இயக்குநரான சாய் பிரசாத்க்கு செபி உத்தரவிட்டபோது, அவர் வேறு புதிய நிறுவனங்களை நிறுவி பணத்தை அவற்றிற்குத் திருப்பிவிட்டார் என்று வழக்குத் தொடரப்பட்டது.
இத்திட்டத்தில் பெட்ரோலியம், கட்டுமானம் முதல் எரிசக்தி வரையிலான 23 துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை எதிர்பார்த்த வருவாயை வழங்கவில்லை என்பதால் ஏமாற்றப்பட்ட 300 முதலீட்டாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் மும்பையின் போலீசார் நான்கு குழும நிறுவனங்களின் இயக்குநரான சாய் பிரசாத்தை 2020ஆம் ஆண்டு கைது செய்தது. பாப்கர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 420, 409 மற்றும் 120B ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.