
வயதுக்கு மீறிய இரட்டிப்பு வளர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றன. அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்பது தான் சிறந்த உணவுப்பழக்கம். இது புரியாவிட்டால், சிறுவயதிலேயே உடல் எடை கண்ணாபின்னானு அதிகரித்து பல பிரச்சினைகளை நம் குழந்தைகளுக்கு வரவழைத்துவிடும்.
பீட்சா, பர்கர், கோலா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே பிள்ளைகளின் பருமனுக்குக் காரணம் அல்ல. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரை, பச்சரிசி, மைதா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் பருமனுக்கு முக்கிய காரணிகள்.
அதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை அதிகமாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
சிலர், என் மகள் சரியாகச் சாப்பிட மாட்டாள். அதனால், அவளுக்கு தினமும் ஜூஸ் கொடுக்கிறேன் என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறு. எந்தப் பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும். சர்க்கரை கலக்காமல் பழரசங்களாக குடித்தால் கூட, கெட்ட கொழுப்புகள் தான் உடலில் சேரும்.
அதுபோல, சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே உண்ணலாம்.
குழந்தைகளுக்கான சமையலில் எண்ணெய், மசாலாப் பொருள் களைக் குறைவாகச் சேர்ப்பதே நல்லது.
இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன், ஐபாட் போன்ற சாதனங்களின் பயன்பாடும், குழந்தைகளின் எடை கூடுவதற்கு வழிவகுக்கிறது. ஐந்து வயது வரை, குழந்தைகள் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்த பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. இல்லை எனில், உட்கார்ந்தே விளையாடும் வீடியோ கேம்ஸில் மூழ்கி, வெளியில் விளையாடும் பழக்கத்தையே மறந்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, வியர்க்க விறுவிறுக்க விளையாடுவது, வெயிலில் நிற்பது, கைகளைச் சுத்தமாகக் கழுவுவது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத் தருவது அவசியம்.
குழந்தைகள் அடம் பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது. நம் உடலை ஆரோக்கியமாகக் காக்கும் வகையிலான நோய் எதிர்ப்புத்திறன் இயல்பாகவே நம் உடலில் உள்ளது.
ஆகவே, ஆரோக்கிய உணவின் மூலம் நோய்கள் வராமல் தற்காத்துக் கொண்டு, கூடுமானவரை மருந்துகளை, தவிர்ப்பது நல்லது. மனஅழுத்தத்தால் கூட உடல் பருமன் உண்டாகலாம்.