
Side Effects of Drinking Too Much Sugarcane Juice in Summer : கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது. மேலும் இந்த சீசனில் நீரிழப்பு ஏற்படுவது பொதுவானது. எனவே உடலில் போதுமான அளவு எலக்ட்ரோலைட்டுகளுடன் உங்களை நீரேற்றமாக வைப்பது ரொம்பவே முக்கியம். இதற்கு கரும்பு சாறு உங்களுக்கு உதவும்.
ஆம், கோடை வெயிலுக்கு கரும்பு ஜூஸ் சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இந்த பானம் கோடைகாலத்தில் மிகவும் பிரபலம் என்று சொல்லலாம். கரும்பு சாறு குடிப்பதற்கு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை வாரி வழங்கும். கரும்பு சாறு உடலுக்கு தேவையான ஆற்றலை விரைவாக அதிகரிக்கும் இயற்கை சர்க்கரை உள்ளன. கரும்பு ஜூஸில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது நம் உடலின் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும். என்னதான் கரும்பு ஜூஸ் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும் சில பக்க விளைவுகளும் அதில் உள்ளன. அதாவது, அளவுக்கு அதிகமாக கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் சில பக்க விளைவுகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கரும்பு சாறு அதிகமாக குடித்தால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள்:
இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்:
கரும்பு சாட்டில் சுக்ரோஸ் அதிகமாக உள்ளதால் இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே டைப்-2 நீரிழிவு நோயாளிகள் இந்த பானத்தை குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதுபோல, இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும், அது மிக அதிக கிளசெமிக் சுமையை கொண்டுள்ளதால் இது ரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கும். மேலும் தொடர்ந்து அதிக சர்க்கரை அளவுகளானது உங்களது இதயம், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளை மோசமாக பாதிக்கும்.
பற்கள் பாதிக்கப்படும்:
பல் சொத்தை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் கரும்பு ஜூஸ் குடிக்க கூடாது. ஏனெனில் அதில் அதிக அளவு இயற்கை சர்க்கரை உள்ளதால் அது வாயில் பாக்டீரியாக்களை உருவாக்கி, துவாரங்களை ஏற்படுத்தும்.
உடல் பருமனாகும்:
கரும்பு ஜூஸில் கலோரிகள் மிக அதிகமாக உள்ளதால் அதன் அதிகப்படியான நுகர்வு எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
செரிமான பிரச்சனைகள் ஏற்படும்:
கரும்பில் இருக்கும் பாலிகோசனால் அஜீரணம், வயிற்று வலிக்கு வழிவகுக்கும். எனவே இதை அதிகமாக குடித்தால் வாந்தி, தலைசுற்றல், தூக்கமின்மை, வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர இரைப்பை பிரச்சனையையும் ஏற்படுத்தும். கரும்பு சாற்றில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பு உள்ளது. அதுபோல உங்களுக்கு ஏற்கனவே செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு கரும்பு சாறு குடிப்பது நல்லது.
பிற பக்க விளைவுகள்:
- கரும்பு சாறு உடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால் வெப்பத்தின் போது இது அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் இதை அதிகமாக குடித்தால் உடலில் நீரிழப்பு பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- கொழுப்பு கல்லீரல் நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சாறு அதிகமாக குடிக்க வேண்டாம். மீறினால் இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
குறிப்பு : கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் தான் குடிக்க வேண்டும் என்றில்லை, அதற்கு பதிலாக மோர், எலுமிச்சை ஜூஸ், புதிய பழச்சாறு, தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் குடிக்கலாம்.