
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாமல் உடல் எடையை குறைப்பது ரொம்பவே கடினமான விஷயம். எடை குறையனும், ஆனால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்லும் ஆளா நீங்க? அப்படியானால் உங்களது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மட்டும் செய்தால் போதும். உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம். அது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
உடற்பயிற்சி செய்யாமலேயே உடல் எடையை குறைக்க பின்பற்ற வேண்டியவை :
1. ஆரோக்கியமான உணவில் கவனம் தேவை :
எடை இழப்பில் ஆரோக்கியமான உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆரோக்கியமான உணவால் எதையும் செய்ய முடியும். எனவே காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், மெலிந்த ப்ரோட்டீன்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். அதுபோல பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை உணவுகள், அதிக கலோரிகள் நிறைந்த உணவுகள், பானங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
2. நீரேற்றமாக இருக்கவும்!
உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எனவே நாள் முழுவதும் நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் சில சமயங்களில் தாகம் எடுப்பது கூட தெரியாமல் தேவையில்லாத நொறுக்கி தீனிகளை சாப்பிடுகிறோம். இதனால் எடை தான் அதிகரிக்கும்.
3. நல்ல தூக்கம் ;
ஆரோக்கியமான எடை இழப்புக்கு போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியம். எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் பசி ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் தேவையற்ற சமயத்தில் உணவு சாப்பிட தூண்டும். இதன் விளைவாக எடை தான் அதிகரிக்கும்.
4. மன அழுத்தம் இல்லாமை :
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால் பலரும் நாள்பட்ட மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக சிலர் தேவையில்லாத உணவுகளை அதிகமாக சாப்பிடுவார்கள். இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே மன அழுத்தத்தை குறைக்க தினமும் யோகா, தியானம், ஆழ்ந்த மூச்சு பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள்.
5. உணவை தவிக்காதே!
ஒரு சிலர் எடையை குறைப்பதற்காக ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி செய்வது தவறு. எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால் மூன்று வேளையும் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். அதுவும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே.
6. உணவில் கட்டுப்பாடு :
பொதுவாக பிடித்த மற்றும் ருசியான உணவுகளை நாம் அதிகமாகவே சாப்பிட்டு விடுகிறோம். இது எடையை அதிகரிக்கும். ஆனால் நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் இந்த விஷயத்தில் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது அதிக உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதற்கு நீங்கள் சிறிய கிண்ணம் தட்டு பயன்படுத்துவதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம்.
இதில் கவனம்!!
நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் எடையை குறைக்க விரும்பினால் மேலே சொன்ன விஷயங்களுடன் இவற்றையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் அவ்வப்போது உங்களது உடல் பொசிஷனை மாற்றுங்கள்.
- உங்களது கால்கள் பாதங்களுக்கு அடிக்கடி வேலை கொடுக்க வேண்டும். இது உடற்பயிற்சியை விட ரொம்பவே சிறந்தது.
- உடற்பயிற்சி செய்யாவிட்டால் ஏதாவது வீட்டு வேலைகளை செய்யுங்கள். உதாரணமாக பாத்திரங்களை கழுவுதல், கையால் துணிகளை துவைத்தல், வீட்டை சுத்தம் செய்தல், மாடிப்படி ஏறி இறங்குதல், சமைத்தல், நடந்து சென்று கடைகளில் பொருட்களை வாங்குதல் போன்றவை அடங்கும்.
மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் உடற்பயிற்சி செய்யாமலேயே உங்களது எடையை சுலபமாக குறைத்து விடலாம். ஆனாலும் உங்களது அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சியை இணைப்பது இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.