
'மூக்கிரட்டை கீரை' பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு அற்புதமான மூலிகை. இந்த கீரையின் இலை, வேர், தண்டு என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்களால் நிறைந்துள்ளன. எளிதில் கிடைக்க கூடிய இந்த கீரையானது உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும். இதை பொரியலாக அல்லது பொடியாக கூட வாங்கி பயன்படுத்தலாம். இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது தான். சரி இப்போது இந்த மூக்கிரட்டை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மூக்கிரட்டை கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :
மூக்கிரட்டை கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, ஃபோலேட், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, செலினியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன.
மூக்கிரட்டை கீரையின் ஆரோக்கிய நன்மைகள் :
1. உடல் எடை பருமன் உள்ளவர்கள் இந்தக் கீரையை உணவில் எடுத்து வந்தால் உடல் எடை குறையும்.
2. சரும நோய்களுக்கு இந்த கீரையின் வேரை சுத்தம் செய்து அரைத்து சருமத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றங்கள் தெரியும்.
3. கணுக்கால் வீங்கி இருந்தால் இந்தக் கீரையின் பொடியை சூடான நீரில் கலந்து அதில் கால்களை நனைத்தால் வீக்கம் குறையும்.
4. மூக்கிரட்டை வேர் பொடியை அரிசி கழுவிய நீரில் சேர்ந்து 2 கிராம் அளவு குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்.
5. மூக்கிரட்டை கீரையை கீழாநெல்லியுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் பலப்படும், குடல் பிடிப்பு பிரச்சனை சரியாகும். இது தவிர இரத்தத்தையும் சுத்திகரிக்கும்.
6. பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் இரண்டையும் வெளியேற்ற முக்கிரட்டையின் முழுச் செடியையும் இளநீருடன் அரைத்து சிறிது நெல்லி அளவு எடுத்து 2 கிராம் சாப்பிட வேண்டும்.
7. வெண்படல பிரச்சனை இருப்பவர்கள் இந்த இலையை அரைத்து சாறு எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவும்.
8. மாலைக்கண் நோய் உள்ளவர்கள் இதன் சாற்றை பசும்பாலில் கலந்து குடிக்க வேண்டும்.
9. மூக்கிரட்டை வேர்சாற்றை 15-20 கிராம் எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு கசாயம் ஆக்கி குடித்து வந்தால் கணுக்கால் வீக்கம் குறையும்.
10. சிறுநீரகத் தொற்று உள்ளவர்கள் முக்கிரட்டை தனியா மற்றும் நெருஞ்சி விதைகள் போன்றவற்றை சேர்த்து கஷாயமாக்கி குடிக்க வேண்டும்.
11. இந்த இலையின் சாற்றை 10 மில்லி அளவு குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.
12. மூக்கிரட்டை விதைகளை 20 கிராம் எடுத்து அதை கஷாயம் போட்டு குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.