இளவயது பூப்பெய்தலுக்கு ஹார்மோன் பிரச்னைகளே முக்கிய காரணம். இது முறையற்ற உதிரப்போக்கு மற்றும் எதிர்கால சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இன்றைய வாழ்க்கைமுறையும் உணவுமுறையும் வெகுவாக உடலில் பல மாற்றங்கள் நிகழ காரணமாகின்றன. அதில் முக்கியமானது இளவயதில் பூப்படைதல். இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் சிறு பிராயத்திலேயே வயதுக்கு வருவது அம்மாக்களின் கவலையையும் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். இந்த இளவயது பூப்பெய்தலுக்கு காரணம் என்ன? அதனால் எதிர்காலத்தில் காத்திருக்கும் சிக்கல்கள் என்ன என்பவை பற்றி மகப்பேறு மருத்துவர் மதுப்பிரியா அவர்களிடம் பேசினோம்.
இளவயது பூப்பெய்தலுக்கு காரணம் என்ன?
பொதுவாக 12 வயது முதல் 14 வயது நிறைவடையும் காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் பூப்படைவார்கள். ஆனால் சமீபகாலமாக 8 வயது முதல் 10 வயதிலேயே பெரும்பாலான சிறுமிகள் வயதுக்கு வருவதை பார்க்கமுடிகிறது. இதற்கு சில முக்கியமான காரணங்களும் உண்டு.
அதாவது இந்த இளவயது பூப்பெய்தலுக்கு முழு முதற்காரணம் ஹார்மோன் பிரச்னையே. ஒரு பெண் குழந்தை வயதுக்கு வருவதற்கு உதவும் Reproductive ஹார்மோன்களில் ஏற்படும் சீரற்றத்தன்மை, தைராய்டு ஹார்மோன்களில் ஏற்படும் அப்நார்மாலிட்டியால் பெண் குழந்தைகள் இளவயதில் பூப்படைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் விளையும் பிரச்னைகளை தவிர்க்க மகப்பேறு மருத்துவர் அல்லது உட்சுரப்பியல் நிபுணரை (endocrinologist) சந்தித்து முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.
அதேபோல axis எனப்படும் brain - pituitary - hypothalamus , brain - pituitary - ovary ஆகியவை முதிர்ச்சி அடையும் போதுதான் ஆரோக்கியமான பூப்பெய்தல் நிகழ்கிறது. ஆனால் இளவயதில் பூப்படையும் போது இந்த axis முதிர்ச்சியற்று இருப்பதால் முறையற்ற உதிரப்போக்கு நிகழவும் (irregular periods) வாய்ப்புள்ளது.
வெறும் '4' விஷயங்கள்.. ஈஸியா '18' கிலோ எடை குறைத்த பெண்ணின் அனுபவ பகிர்வு!!
பூப்பெய்தல் நெருங்குவதை எப்படி கண்டுபிடிப்பது?
பெண் குழந்தைகளை பெற்ற அம்மாக்களுக்கு இருக்கும் முக்கியமான கவலைகளில் ஒன்று தங்கள் குழந்தகளுக்கு நிகழும் இந்த இயற்கையான உடல் மாற்றம் குறித்து பேசுவதற்கான சரியான சமயம் எது என்பதுதான். பொதுவாக ஒரு பெண் குழந்தை பூப்படைய போகிறாள் என்பதை மார்பக பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், மார்பக வளர்ச்சி, மற்றும் அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் முடி வளர்ச்சியை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த மாற்றங்கள் உடலில் நிகழ தொடங்கிய ஒன்றிலிருந்து ஒன்றரை ஆண்டுக்குள் அந்த குழந்தை வயதுக்கு வந்துவிடுவாள்.
இளவயது பூப்பெய்தல் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் சிக்கல்கள்:
சிறு பிராயத்தில் பூப்படையும் பெண்கள் 25 வயதுக்குள்ளேயே திருமண வாழ்வில் இணைவது நன்று. ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே, அதன் கருப்பை தாங்கும் முட்டைகளின் எண்ணிக்கைகளும் தீர்மானிக்கப்படுகின்றது. கருமுட்டையின் எண்ணிக்கை என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும். சிலருக்கு 3 லட்சம் கருமுட்டைகள் இருக்கலாம், ஆனால் சிலருக்கோ 2 லட்சம் அல்லது 1 லடம் கருமுட்டைகளே இருக்கும்.
ஆனால் axis முதிர்ச்சி அடைந்ததற்கு பிறகு, மாதந்தோறும் சீரான உதிரப்போக்கு நிகழத் தொடங்கும். அதாவது ஒரு மாதவிடாய் சுழற்சியின் போது ஒரு கருமுட்டையை வெளியேற்ற 15 முதல் 20 கருமுட்டைகள் உதவுகிறது. இப்படி ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியின் போதும் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வரும். இதனால் பொதுவாக 45 வயதோடு பெண்களுக்கு நின்று போகும் உதிரப்போக்கு , 8-10 வயதிலேயே, அதாவது மிக சிறிய பிராயத்தில் வயதுக்கு வரும் பெண்களுக்கு 40 வயதுக்குள்ளேயே நின்று போக வாய்ப்புகள் அதிகம். எனவே 25 வயதுக்குள் திருமண வாழ்க்கையில் ஈடுபடுவதுதான் அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பை கொடுக்கும்.
ஆனால் இன்றோ கனவுகளை நோக்கி பறக்கும் பெண்கள் பலர் திருமணத்தை தள்ளிப்போடுவதையும் பார்க்கமுடிகிறது. இன்று அறிவியலின் வளர்ச்சி இதற்கும் பல தீர்வுகளைக் கொண்டுவந்திருக்கிறது. மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதல்படி, பெண்கள் தங்கள் கருப்பையில் இருக்கும் கருமுட்டையின் எண்ணிக்கையை பரிசோத்து அறிந்து கொள்ளலாம். அதோடு Social Egg Freezing மூலமாக தங்கள் கருமுட்டையை சேமித்தும் வைக்கலாம் .