Ragi For Weight Loss : வேகமாக எடையை குறைக்க ராகி எப்படி உதவுகிறது மற்றும் அதை உணவில் சேர்ப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறார்கள். ஒவ்வொருவரின் எடை இழப்பு பயணமானது தனித்துவமானது. உடல்நலம் மற்றும் உடற்தகுதி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால் உணவு பழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். எடை இழப்பு என்று வரும்போது உணவு முறைதான் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் சமீப காலமாகவே, மக்கள் மத்தியில் கேழ்வரகு எடையை குறைக்க எப்படி உதவுகிறது? அதை உணவில் சேர்த்துக் கொள்வது எப்படி என்று அதிகமாக பேசப்படுகிறது. அதன்படி பல இந்திய வீடுகளில் ராகி மாவு பல நன்மைகளை வழங்குவதால் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, எடையை குறைப்பதற்கு ராகி ஏன் சிறந்தது என்றும்.. அதை உணவில் சேர்ப்பது எப்படி என்றும்.. அதன் பிற நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ராகியின் ஊட்டச்சத்துக்கள்:
ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முக்கியமாக ராகியில் இருக்கும் கால்சியம் பாலைவிட எலும்புகளை வலிமையாக்கும் தன்மை கொண்டது.
இதையும் படிங்க: லெமன் காபில இவ்ளோ சக்தியா? 1 மாதத்தில் எடையை குறைச்சிரும்
எடையை குறைப்பதற்கு ராகி ஏன் சிறந்தது?
நார்ச்சத்து :
ராகியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கும் மற்றும் அதிகம் சாப்பிடுவதை தடுக்கும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
புரதம் :
ராகியில் போதுமான அளவு புரதம் உள்ளதால் இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் உங்களை திருப்திப்படுத்துகிறது. இதனால் எடையை சுலபமாக குறைக்க உதவுகிறது.
குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ்:
ராகியில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால், இது உங்களது ரத்த சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்தும். அதுமட்டுமின்றி இது உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் மற்றும் பசியை கட்டுக்குள் வைக்கும்.
வைட்டமின்கள் & தாதுக்கள் :
ராகியில் போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன அவை ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: தொங்கும் தொப்பை கரைய, எடை வேகமாக குறைய.. தினமும் காலை இதுல '1' சாப்பிடுங்க!
ராகியின் பிற நன்மைகள்:
- ராகில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
- ராகியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.
- ராகியில் இரும்புசத்து அதிகமாக உள்ளதால் இது ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது.
- ராகியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
எடையை குறைப்பதற்கு ராகியை உணவில் சேர்ப்பது எப்படி?
எடையை குறைப்பதற்கு ராகியை பல்வேறு வழிகளில் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில வழிகள் இங்கே:
ராகி கஞ்சி:
தேவையான பொருட்கள்:
ராகி மாவு, தண்ணீர் அல்லது பால் வெல்லம் மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய்.
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ராகி மாவு மற்றும் தண்ணீர் அல்லது பால் சேர்த்து நன்றாக சமைக்கவும். இதனுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். கஞ்சி பதத்திற்கு வந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கி சாப்பிடுங்கள்.
நன்மைகள்:
அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இதை காலை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும்.
ராகி ரொட்டி:
தேவையான பொருட்கள்:
ராகி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ரொட்டி பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பிறகு சப்பாத்தி கட்டையில் உருட்டி தவாவில் போட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ராகி ரொட்டி ரெடி
நன்மைகள்:
நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்த இந்த ரொட்டியானது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.
இது தவிர ராகியில் நீங்கள் லட்டு, மால்ட், இட்லி, தோசை போன்றவை கூட செய்து சாப்பிடலாம்.