Aatu Kaal Soup Recipe : ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
குளிர்காலத்தில் ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் அல்லது குடிக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். குறிப்பாக, சூடாகவும், அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றாலே நீங்கள் 'சூப்' தேர்வு செய்யலாம். அதுவும் குறிப்பாக 'ஆட்டுக்கால் சூப்'. இந்த சூப் சளி இருமல் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை என அனைத்திற்கும் ரொம்பவே நல்லது. இப்போது ஆட்டுக்கால் சூப் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 'முடவாட்டுக்கால் கிழங்கு' சூப் குடிங்க.. மூட்டு வலி, முடக்கு வாதத்திற்கு குட் பை சொல்லுங்க..!!
ஆட்டுக்கால் சூப் செய்ய தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் - 250 கிராம்
வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1
மிளகு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 3
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
இப்போது மல்லி விதை, மிளகு, சீரகம் இவை மூன்றையும் எண்ணெய் இல்லாமல் தனி தனியாக வறுத்து, பின் அவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது எடுத்து வைத்த ஆட்டுக்காலை தீயில் சுட்டுக் கொள்ளுங்கள். அதன்பிறகு ஒரு குக்கரில் ஆட்டுக்கால், தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து 15 விசில் விட்டு வேக வைக்கவும். அதன்பிறகு ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து நன்றாக வத்க்கவும். அதன் பின் குக்கரில் வேகவைத்த ஆட்டுக்காலை தண்ணீருடன் சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் மசாலாவையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆட்டுக்கால் ரெடி.
இதையும் படிங்க: மாட்டு வால் சூப்: 30 வயது கடந்த பெண்களுக்கு ரொம்பவே நல்லது.. சிம்பிள் ரெசிபி!
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
இந்த குளிர்காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறை ஆட்டுக்கால் சூப் குடித்து வந்தால் சளி, இருமல் காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். எனவே ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அடிக்கடி ஆட்டுக்கால் சூப் குடிக்க வேண்டும். இது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். இதனால் பருவ கால தொற்று நோய்கள் நம்மை அண்டாது. ஏனெனில் ஆட்டுக்கால் சூப்பில் இருக்கும் 'அர்ஜினைன்' என்னும் பொருள் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
எலும்புகளை வலுப்படுத்தும்:
ஆட்டுக்காலில் மக்னீசியம், கால்சியம், காப்பர் போன்ற நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் உள்ளன. எனவே ஆட்டுக்கால் அடிக்கடி குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும். மேலும் இதில் பல வைட்டமின்கள் உள்ளன. அவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமை அதிகரிக்கும்.
தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்:
மன அழுத்தம் அதிகரிக்கும் போது இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் போகும். தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட வாரத்திற்கு இரண்டு முறை ஆட்டுக்கால் சூப் குடியுங்கள். அதில் இருக்கும் சத்துக்கள் நரம்புகளை தளர்வடையச் செய்து இரவில் நிம்மதியாக தூங்க உதவும்.
உடலை சுத்தமாகும்:
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு ஆட்டு சூப் ரொம்பவே நல்லது. ஆட்டுக்கால் சூப் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி, நம்முடைய உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.
எடையை குறைக்க உதவும்:
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அடிக்கடி ஆட்டுக்கால் சூப் செய்து குடியுங்கள். இதனால் விரைவிலேயே நீங்கள் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது:
இரவில் லைட் ஃபுட் சாப்பிட நினைத்தால் ஆட்டுக்கால் சூப் சிறந்த தேர்வு. இது எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமின்றி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.