நாம் வாழ்வதற்கு உணவு மிகவும் கட்டாயமாக தேவைப்படக்கூடிய ஒன்று தான். ஆனால் அதேசமயத்தில் அளவுக்கு மீறி உணவு சாப்பிட்டால், பல்வேறு வகையில் உடல் பாதிப்புகளை உருவாக்கும். குறிப்பிட்ட உணவுகள் மூளையின் செயல்பாட்டையும் பாதிப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளன.
ஒவ்வொரு நாளும் நாம் சாப்பிடும் உணவு அன்றைய நாளுக்கான உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. உடல்நலனை கருதில் உணவு உட்கொள்வது கட்டாயம். உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், ஆற்றல் வெளிப்பாடு உள்ளிட்ட கூறுகளுக்கு உணவின் மூலம் தான் ஊட்டச்சத்தை வழங்க முடியும். ஆனால் சில உணவுகள் உடலுக்கு உகந்தது கிடையாது. உடல் பருமன், சக்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு உணவுப் பழக்கம் தான் முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த வரிசையில் மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலைக் கூட குறிப்புட்ட உணவுகள் பாதிக்கின்றன. அதுகுறித்து தெரிந்துகொள்வோம்.
இனிப்பு உணவுகள்
சக்கரை அதிகமுள்ள உணவுகள், இனிப்பு பானங்கள் ஆகியவை இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. அடிக்கடி குளிர்பானங்களை குடித்து வருவோருக்கு, மூளை செயல்திறனில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மறுபுறம், இது இதய பிரச்சினைகள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன. சக்கரை சுவை கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது, இன்சுலின் ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் கற்றல் மற்றும் நினைவாற்றல் போன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கெட்டக் கொழுப்புகள்
உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் கொழுப்புகள் கொண்ட உணவை அதிகம் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு கேடு தரும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சிகளில் கெட்டக் கொழுப்பு அதிகமுள்ளது. நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மட்டுமின்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களிலும் கெட்டக் கொழுப்புகள் அதிகம் உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், ரத்தக் கொதிப்பு பிரச்னை உள்ளவர்கள் உணவுகளில் நல்ல கொழுப்புகளை மட்டுமே சாப்பிடுங்கள். அதையும் மீறி கெட்டக் கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிட்டால், பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்.
மது
மூளைக்கு நேர்மறையான எண்ணங்களை வழங்குவதற்கு பதிலாக, எதிர்மறையான எண்ணங்களை தூண்டிவிடும் போக்கும் மது வகைகளில் காணப்படுகிறது. எனினும் எதிர்மறையான எண்ணங்கள் அதிகரித்த போதிலும், அதை கட்டுப்படுத்துவதில் தான் மனிதனின் முதிர்ச்சி உள்ளது. இதனால்தான் மதுப்பிரியர்கள் பலரும் அளவுக்கு மீறி குடித்துவிட்டு, நினைவாற்றலை இழந்து வீதிகளில் விழுந்து கிடப்பார்கள். அதேபோன்று மது போதையில் அவர்கள் சிந்திக்கும் திறனையும் இழக்கின்றனர். இதுதொடரும் பட்சத்தில், விரைவாக அவர்களிடம் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன், இரண்டுமே இல்லாமல் போய்விடுகிறது.
தண்ணீர் குடிக்க பயந்தால்.. ஆயுட்காலம் குறையும் - தெரியுமா உங்களுக்கு..?
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்
நாம் உண்ணும் பல உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் காணப்படுகின்றன. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கார்ப் என்று ஒரு வகை உள்ளது. தானியங்களை பதப்படுத்துவதால் வரும் அனைத்து தூசுகளையும் இப்படி கணக்கிடலாம். மைதா இதற்கு உதாரணம். இதில் சமைக்கப்படும் உணவுகளை அதிகமாக உட்கொள்வது மூளை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல என்று மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.
செயற்கை இனிப்புகள்
இனிப்புகள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, செயற்கை இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது மூளைக்கு நல்லதே கிடையாது. அதேசமயத்தில் மூளைக்கு நன்மை தரக்கூடிய உணவுகளும் உள்ளன. அவை வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் கீரை போன்ற காய்கறிகள், டார்க் சாக்லேட் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை மூளைக்கு ஊக்கமளிக்கும் உணவுகளாக அறியப்படுகின்றன.