குழந்தைகளுக்கு சத்தான கீரை காரப் பொங்கல் இப்படி செய்து கொடுங்கள்!

By Dinesh TGFirst Published Feb 1, 2023, 11:29 PM IST
Highlights

வாருங்கள்! ருசியான கீரை காரப்பொங்கல் ரெசிபியை வீட்டிலும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தினமும் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகளவு காய்கறிகள் ,பழங்கள் மற்றும் கீரைகளை எடுத்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்களும், ஊட்டசத்து நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். கீரைகளை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. கீரைகளை பொரியல், கடையல் என்று செய்து கொடுப்பதால் அதை சாப்பிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். 

எனவே அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று நாம் கீரை வைத்து சுவையான கீரை கார பொங்கல் செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸிற்க்கும் கொடுத்து அனுப்பினால் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள். 

வாருங்கள்! ருசியான கீரை காரப்பொங்கல் ரெசிபியை வீட்டிலும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் : 

முருங்கை கீரை - 1 கட்டு
பச்சரிசி - 1 கப் 
பாசிப் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 1 
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து 
பெருங்காயம் -1/2 ஸ்பூன் 
நெய் - 1 கரண்டி 
உப்பு-தேவையான அளவு 

தாளிப்பதற்கு:

நெய் - 2 ஸ்பூன்
கிராம்பு - 2 
ஏலக்காய் - 1 
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
முந்திரி பருப்பு- தேவையான அளவு

சூப்பரான சைட் டிஷ் - ரிச் இன் ப்ரோட்டீன் "சோயாபீன்ஸ் மசாலா"

செய்முறை : 

முதலில் கீரையை சுத்தம் செய்து கொண்டு அதனை அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து அதில் போதுமான அளவு (3 மடங்கு தண்ணீர் ) ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பினை சேர்த்து வேக வைக்க வேண்டும்.  அரிசி பாதி அளவு வெந்த பின் அதில் நெய், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்த பின் இஞ்சி , வெங்காயம், சேர்த்து வதக்கி விட்டு பின் தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் கீரையை சேர்த்து வதக்கி விட வேண்டும். (கீரை சுமார் 5 நிமிடங்கள் வெந்தால் போதும்) 

அனைத்தும் நன்றாக வெந்து மசிந்த பிறகு அதில் பொங்கலையும், சிறிது நெய்யும் சேர்த்து நன்றாக கிளறி விட்டால் நெய்யின் கம கம வாசனையில் கீரை பொங்கல் ரெடி! 

click me!