
Is Palm Oil Good for Health Explained by Dr. Dharini Krishnan : தற்போதைய காலத்தில் உணவு வகைகள் பெருகியது போலவே, நோய்களும் பெருகி வருகின்றன. உணவில் நலம் தரும் நல்ல உணவுகள், ஆரோக்கியத்தை கெடுக்கும் கெட்ட உணவுகள் என்ற வகைகளும் உண்டு. இப்படி வகைப்படுத்துவதில் எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக எண்ணெய் தேர்வு செய்வதில் இந்த குழப்பம் நிலவுகிறது. பாமாயில் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு கேடு என்றும் சொல்லப்படுகிறது.
பாமாயில் விலை சற்று மலிவாகவும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. குறிப்பாக ``0% பாமாயில்" என விற்கப்படும் எண்ணெய்களுக்கு வரவேற்பு உள்ளது. பாமாயில் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுக்கதை நிலவி வருகிறது. இந்தப் பதிவில் பாமாயிலில் உள்ள ஊட்டச்சத்துகள், ஆரோக்கியமான உணவுகளில் பாமாயிலுக்கு இடம் உள்ளதா? அதை எடுத்து கொள்ளலாமா? மருத்துவர் தாரிணி கிருஷ்ணன் அளிக்கும் விரிவான விளக்கத்தை காணலாம்.
பாமாயிலில் நிறைவுற்ற மற்றும் நிறைவுறா கொழுப்புகள் உள்ளன. அவற்றின் சமநிலைதான் அதனை மற்ற எண்ணெய்களில் இருந்து வேறுபடுத்துகிறது. பாமாயில், கோகோ வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய தாவர மூலங்களிலிருந்து பெறப்படும் நிறைவுற்ற கொழுப்புகள் என்பவை விலங்கு கொழுப்புகளிலிருந்து தயாரிக்கப்படும் கொழுப்பு அமிலங்களில் இருந்து வேறுபடுகிறது. எல்லா நிறைவுற்ற கொழுப்புகளையும் ஒரே மாதிரி வகைப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.
பாமாயில் ஒரு பார்வை!
பாமாயிலில் தோராயமாக 50% நிறைவுற்ற கொழுப்புகள் காணப்படுகின்றன. அதனுடன் 40% ஒற்றை நிறைவுறா மற்றும் 10% பாலி நிறைவுறா கொழுப்புகளும் உள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO), நிறைவுற்ற கொழுப்பு என்பது அன்றாடம் எடுத்துக் கொள்ளும் கலோரிகளில் 8 முதல் 10% மேல் இருக்கக்கூடாது என்கிறது.
பாமாயில் உடலுக்கு கேடு தரும் என பொதுவாக சொல்லிவிட முடியாது. அதிகமான ஸ்மோக் பாயிண்ட், ஆக்ஸிஜனேற்ற நிலைத்தன்மை ஆகியவை அடிப்படையில் பாமாயில் பயன்படுத்த பொருத்தமான எண்ணெய்தான். இந்த எண்ணெய் பதப்படுத்துதல் செயல்முறையில் டிரான்ஸ் கொழுப்புகளை உற்பத்தி செய்யாது. இது முக்கியமான நன்மையாகும். ஒரு நபர் தன் அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்பு எடுத்து கொள்வதை 1% குறைவாக மாற்ற உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பாமாயில் அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
நாம் என்ன எண்ணெய் பயன்படுத்துகிறோம் என்பதை விட அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எந்த எண்ணெய்யும் மீண்டும் சூடாக்கி உண்ணக் கூடாது. இது எண்ணெய்யில் உள்ள மூலக்கூறு அமைப்பை சிதைத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உற்பதி செய்யும் அபாயம் உள்ளது. மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பயன்பாடு, எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உடல்நலத்தை மோசமாக மாற்றக் கூடும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தாவர அடிப்படையிலான உணவுமுறையும் ஒரு காரணமாக அமையும். இதில் பாமாயில் உள்பட அனைத்து சமையல் எண்ணெய்களும் அளவாக பயன்படுத்தப்பட வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.