மதியம் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்கி எழுவது, உடலுக்கு ஆரோக்கியமானது என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. அவ்வகையில் மதிய நேரத்தில் தூங்குவது நமக்கு எந்த அளவிற்கு நல்லது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நம்மில் பலருக்கும் மதிய நேரத்தில் உணவு சாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் வருவது வழக்கம். இருப்பினும் மதிய நேரத்தில் சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது. இதனால் உடல் எடை கூடும் மற்றும் மந்தமாக இருக்கும். அடுத்தடுத்த வேலைகளை சரியாக செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகி விடும் என்று பரவலான கருத்து நம்மிடையே கல்வி வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால், மதியம் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்கி எழுவது, உடலுக்கு ஆரோக்கியமானது என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. அவ்வகையில் மதிய நேரத்தில் தூங்குவது நமக்கு எந்த அளவிற்கு நல்லது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மதிய நேரத்தில் தூக்கம்
வயதானவர்கள் பகல் பொழுதில் 30 முதல் 90 நிமிடங்கள் வரை தூங்குவதன் மூலமாக, அவர்களுடைய மூளைக்கு நல்ல பலன் கிடைக்கும் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வயதானவர்களுக்கு மட்டுமின்றி, வேலை செய்யும் அனைவருக்கும் இது பொருந்தும்.
நன்மைகள்
பகலில் குட்டித் தூக்கம் போடுவதால், நமது மனம் ரிலாக்ஸ் அடைந்து எண்ண ஓட்டம் மேம்படும் என மருத்துவர் விபில் குப்தா தெரிவிக்கிறார். கவலை மற்றும் சோர்வு போன்றவை குறைந்து நம் உடல் புதுவித ஆற்றலைப் பெறும் எனவும் அவர் கூறுகிறார்.
வழக்கமான நேர முறைப்படி இல்லாமல், சுழற்சி முறையின்படி வெவ்வேறு நேரங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு, இந்த பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் மிகவும் உதவிகரமாக அமையும் என மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது மட்டுமின்றி பகல் நேரத்தில் தூங்குவதனால், அலுவலகத்தில் பணித் திறன் மேம்படுகிறது என்றும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Excercise: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
எச்சரிக்கை தேவை
என்ன தான் பகல் நேரத் தூக்கம் நல்லது என்றாலும், அது அதிக நேரம் இருந்து விட்டால், அன்றைய இரவுத் தூக்கத்தை கெடுத்து விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து மருத்துவர் குல்கர்னி கூறுகையில், “பகலில் தூங்குவது என முடிவு செய்துவிட்டால் 15 முதல் 20 நிமிடங்களுக்கு தூங்கினாலே போதுமானது’’ என்று தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக நாம் குறுகிய நேரத்திற்கு மட்டுமே உறங்க வேண்டும் என்பதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக அலாரம் செட் செய்து கொள்வது நல்லது. பகலில் தூங்குவதனால் நமது இரவு நேரத் தூக்கம் தடைபடாது என்பதையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
பகலில் தூங்கும் போது, நமது கவலைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சி அடைய வழிவகை செய்ய வேண்டும். இரவு நேரத்தில் மது மற்றும் காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தூக்கத்தை கெடுத்து விடும்.