ரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க இந்த ஒரு பழம் போதும்..!!

By Dinesh TG  |  First Published Feb 4, 2023, 12:59 PM IST

பலருக்கு வாழைப்பழம் பிடிக்கும். ஆனால் ஒருசிலர் மட்டுமே செவ்வாழைப் பழத்தை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், பிணி இல்லாத பெருவாழ்வு வாழலாம் என்று கூறப்படுகிறது.
 


உடலுக்கு வேண்டிய ஆற்றலையும் ஊக்கத்தையும் கொடுக்கக்கூடிய பழங்களில் முக்கியமானது வாழைப்பழம். உடல் உழைப்பு அதிகமாக கொண்டவர்கள், காலையில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டாலே போதும். அவர்களால் நீண்ட நேரம் வரைக்கும் ஆற்றலுடன் செயல்பட முடியும். உலகம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட வாழைப்பழ வகைகள் உள்ளன. அதில் இந்தியாவில் மஞ்சள் பச்சவி, சர்க்கரை கேளி, கொண்டா ஆரத்தி பழங்கள், அமிர்தபாணி, முகிரி, கற்பூரவள்ளி, கற்பூரவள்ளி சுகர் கேளி போன்ற வகைகள் பிரபலமானவை. அதில் செவ்வாழைப் பழங்களும் அடக்கம். பளபளப்பான சிவப்பு மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இருக்கும் இந்த பழங்கள், பல்வேறு நோய் பாதிப்புகளுக்கான அருமருந்து என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும், இதய ஆரோக்கியம் மேம்படும், செரிமானமும் தடையின்றி செயல்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் செவ்வாழைப் பழத்தின் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

Latest Videos

மஞ்சள் வாழைப்பழத்தைப் போல, செவ்வாழைகளிலும் மனித உடலுக்கு வேண்டிய சத்துக்கள் உள்ளன. சொல்லப்போனால், அதைவிடவும் செவ்வாழைப்பழம் பல்வேறு உடல்நலனை மனிதனுக்கு வழங்குகிறது. குறிப்பாக இதில் காணப்படும் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் இருதய ஆரோக்கியம், எதிர்ப்புச் சக்தி மேம்பாடு உள்ளிட்டவற்றை வழங்குகிறது. வெறும் 100 கிராம் கொண்ட சிவப்பு வாழைப்பழத்தில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.

கட்டுக்குள் வரும் ரத்த அழுத்தம்

சிவப்பு வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஒரு சிறிய வாழைப்பழம் நமது தினசரி தேவையில் 9% பொட்டாசியத்தை வழங்குகிறது. பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை 7 மிமீ எச்ஜி குறைக்க முடியும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. சிவப்பு வாழைப்பழத்திலும் மக்னீசியம் நிறைந்துள்ளது. இதுவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கண்களுக்கு நல்லது

செவ்வாழையில் லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டு கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை கண் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லதாகும். லுடீன் நிறைந்த உணவுகளை உண்பதால், மாகுலர் டிஜெனரேஷன் என்று சொல்லக்கூடிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. லுடீன் நிறைந்த உணவுகளை உண்பதால் இந்த ஆபத்து 26% வரை குறைவதாக மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன. கண் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்த்தான பீட்டா கரோட்டினும் செவ்வாழையில் அதிகளவில் காணப்படுகிறது

இஞ்சி - சுக்கு: எதில் ஆரோக்கியம் உள்ளது..??

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

சிவப்பு வாழைப்பழத்தில் கரோட்டினாய்டுகள், அந்தோசயினின்கள், வைட்டமின் சி மற்றும் டோபமைன் போன்ற முக்கியமான ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன. உணவின் மூலம் கிடைக்கும் ஆந்தோசயினின்களால் இதய நோய் அபாயம் 9% வரை குறைகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்களை சாப்பிட்டால், பல நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு செவ்வாழைப் பழமும் விதிவிலக்கல்ல.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சிவப்பு வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகின்றன. வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டல செல்களை பலப்படுத்துகிறது. ஏதாவது கிருமித் தொற்று ஏற்பட்டால், அதை எதிர்த்து போராடுகிறது. மனித உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் வைட்டமின் பி6 முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பழம் ஒரு ப்ரீபயாடிக் உணவு. அவை வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும். மேலும் இதில் ஃப்ரூக்டோலிகோசாக்கரைடுகள், இன்சுலின் போன்ற ப்ரீபயாடிக் இழைகள் உள்ளன. அவை நீரிழிவு நோயாளிகளுக்கு மலச்சிக்கல் மற்றும் வாயு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்குகின்றன.
 

click me!