தொண்டை கரகரப்பு, மார்பு சளி, தொண்டை வலி குணமாக ஆயுர்வேதம் சொல்லும் எளிய குறிப்புகளை இங்கு காணலாம்.
பருவகாலங்களில் மக்களுக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்களுக்கு எளிதில் தொற்றுநோய்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு இந்த நோய்கள் அதிகம் தாக்கும் அபாயம் உள்ளது. மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, மூச்சுத்திணறல், சில நேரம் பாடாய்படுத்தும் சைனஸ் தலைவலி போன்றவை பருவகாலத்தில் வரும் தொல்லைகள். அடிக்கடி சளி, இருமல், மார்பு சளி ஏற்படுவதால் நம்முடைய சுவாச மண்டலம் பாதிக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை கரகரப்பு, வலி ஆகியவற்றில் இருந்து விடுபட ஆயுர்வேதம் வழிகாட்டுகிறது. அந்த எளிய முறைகளை இங்கு காணலாம்.
எளிய ஆயுர்வேத குறிப்புகள்
தொண்டை வலி, தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டால் உப்பு, மஞ்சள் அல்லது திரிபலா சூரணம் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம். நல்ல பலனளிக்கும்.
ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரைக்க முடியாது. ஆனால் பாலூட்டும் தாய்மார்கள் இந்த மருந்தை எடுத்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் இதன் பலன் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமான மண்டலம் மேம்படவும், புத்திசாலித்தனம் அதிகமாகவும் வசம்பு உதவும். இதனை பிறந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இதனை கொஞ்சமாக தேய்த்து, கொஞ்சம் நெய்யுடன் கலந்த பேஸ்ட்டை குழந்தைக்கு கொடுக்கலாம்.
சளி தொல்லையால் அவதிப்படும்போது சுக்கு கை கொடுக்கும். மசாலா டீயில் இதனை பயன்படுத்தலாம். வெந்நீரில் சுக்கை கொதிக்கவிட்டு அருந்தலாம். குழந்தைகள், பெரியவர்கள் இருவரும் சிறிய அளவில் இதனை மென்றும் சாப்பிடலாம். தொண்டை வலி குணமாகும்.
காய்ச்சல், நெஞ்சு சளி, ஜலதோஷம், போன்ற நோய்களுக்கு கற்பூரவள்ளியை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. முதலில் இந்த செடியின் இலைகளை கொஞ்சம் எடுத்து கொஞ்சம் சூடு செய்து பின்னர் நசுக்கி சாறு எடுங்கள். இந்த சாறுடன் தேனுடன் கலந்து அருந்தலாம். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
மார்பு சளி நீங்க டிப்ஸ்
துளசியை பயன்படுத்துவது சளி, காய்ச்சல் ஆகிய தொல்லைகளுக்கு மிகவும் எளிமையான தீர்வாகும். துளசியுடன் கொதிக்க வைத்த நீரை அருந்தினால் காய்ச்சல், சளி, மார்புச்சளி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். துளசி இலைகளை கழுவி அப்படியே சாப்பிடலாம்.
திரிகடுகம் என்பது மூன்று உலர் மூலிகை பொருட்களின் கலவை. குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு இதை எடுத்து கொள்வார்கள். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை தூளாக்கி வெந்நீரில் போட்டு அருந்தலாம். இந்த தூளை தேனுடன் எடுத்து கொள்ளலாம். வறட்டு இருமல், சளி, மார்பு சளி ஆகியவை குணமாகும்.
இதையும் படிங்க: தினமும் வெங்காயத்துல டீ போட்டு குடித்தால்.. இத்தனை நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் தெரியுமா?
இதையும் படிங்க: தைப் பூசம் 4-ம் தேதியா, 5-ம் தேதியா? எப்போது, எப்படி விரதம் இருந்து வழிபட்டால் முருகன் அருளை அள்ளி கொடுப்பார்