கத்திரிக்காய் என்னும் அற்புத காய்- இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..!!

By Dinesh TG  |  First Published Nov 4, 2022, 11:03 PM IST

கத்தரிக்காயில் ஃபிளாவனாய்டுகள், ஆண்டி ஆக்சிடண்டுகள், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் கத்திரிக்காயை சாப்பிடுவதால் பல உடல்நலப் பிரச்சனைகள் குறையும்.
 


தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கத்திரிக்காய் காய்கறிகளின் ராஜா என்று கூறலாம். ஊறுகாய், துவையல், கொஜ்ஜு, பொறியல், கூட்டு, குழம்பு, சாம்பார், வற்றல் என கத்திரிக்காயை வைத்து என்னவேண்டுமானாலும் சமைக்கலாம். கத்திரிக்காயில் பல வகையான சத்துக்கள் உள்ளன. இந்தியாவில் ஊதா, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கத்திரிக்காய் விற்பனைக்கு கிடைக்கிறது. பல்வேறு நாடுகளில், இது பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதை நமது உணவுகளில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், பல்வேறு உடல் உறுப்புகளுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இருதயம் ஆரோக்கியம் பெறும்

Tap to resize

Latest Videos

கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதிலிருக்கும் பொட்டாசியம், வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் இருதய செயல்பாட்டை நலமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நம்முடைய உணவுப் பத்தியத்தில் வாரம் இருமுறை கத்திரிக்காய் சேர்த்துக்கொண்டு வந்தால், இருதயத்துக்கு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறையும். கத்தரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத் தமனிகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்த பிரச்னைக்கு தீர்வு

இன்றைய காலத்தில் சிறு குழந்தைகளுக்குக் கூட உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது. நமது உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்தால், அது மாரடைப்பிலிருந்து பல உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும். பொட்டாசியம் நிறைந்த கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உயர்ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது

உடலில் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் இருந்தால், அது மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஒருவேளை உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்னை இருக்கும் பட்சத்தில், கத்திரிக்காயை உங்களுடைய உணவுகளில் அடிக்கடி செய்து சாப்பிடுங்கள். கத்தரிக்காயில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் ஒரு சிறந்த ஆண்டி ஆக்சிடண்டாகும். அது உடலில் தேவையில்லாமல் தங்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு கத்திரிக்காய் பல்வேறு வகையில் நன்மை செய்கிறது. பொதுவாகவே கத்திரிக்காயில் குறைந்தளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு, இந்த காய் பல்வேறு வகையில் நன்மை செய்வதாக நிபுணர்கள் கூறுகிறனர். இந்த கத்திரிக்காய் உணவில் இருந்து குளுக்கோஸை உறிஞ்சுவதை கட்டுப்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இவற்றில் பினாலிக் கலவைகள் மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுவதால், அது எலும்பு ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்கிறது.

Clove: கிராம்பை இப்படி பயன்படுத்த கூடாது: மீறினால் ஆபத்து நிச்சயம்!

ரத்தசோகை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

கத்தரிக்காயில் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமல்ல.. எடையைக் குறைக்கவும் கத்திரிக்காய் உதவுகிறது. இவற்றில் கலோரிகள் குறைவு. நார்ச்சத்து அதிகம். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் நீங்கள் விரைவாக உடல் எடையை குறைப்பீர்கள். கத்தரிக்காய் மூளையின் செயல்பாட்டையும் சீராக்கும். கத்தரிக்காயில் உள்ள பைட்டோநியூட்ரியன்ஸ் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. மூளையின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும் உதவுகிறது.

click me!