பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை... உயர்நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Jan 22, 2019, 2:50 PM IST
Highlights

பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார். அமைச்சரின் இந்த குற்றச்சாட்டை மறுத்த தனியார் பால் நிறுவனங்கள், அரசு நிறுவனமான ஆவின் பாலிலும் கலப்படம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஒருசில தனியார் நிறுவனங்களின் பால், தரமற்று இருந்ததாகவும், அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறைச் செயலாளர் கூறியிருந்தார். மேலும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் கேடுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பால் கலப்படம் செய்தால் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் கூடாது. பால் கலப்படத்தில் ஈடுபவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது.  உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான பாலில் கலப்படம் செய்வது ஆரோக்கியத்திற்கு விடுக்கப்படும் மிரட்டல்.

 அதை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், வசூலிக்கப்பட்ட அபராதங்கள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லையென்றால் தமிழக சுகாதார செயலாளரை நேரில் ஆஜராகக் கூடிய நிலை உருவாகும். இந்த வழக்கு வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என உத்தரவிடப்பட்டது. 
 

click me!