கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதற்கு உணவுப் பழக்கம் முறையாக இருக்க வேண்டும். அந்த வகையில் ரத்தத்தில் கெட்டக் கொழுப்பு அளவு அதிகமாக கொண்டவர்கள், சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
ஒரு நபரின் கொலஸ்ட்ரால் அளவு ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். அப்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
ரத்தத்தில் எல்.டி.எல் கொழுப்பு அளவு அதிகப்பட்சமாக இருந்தால், பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். இதனால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, இருதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகள் உருவாகக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதற்கு உணவுப் பழக்கம் முறையாக இருக்க வேண்டும். அந்த வகையில் ரத்தத்தில் கெட்டக் கொழுப்பு அளவு அதிகமாக கொண்டவர்கள், சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
நமது உடலில் அதிகளவில் சேருவது எல்.டி.எல் என்று சொல்லப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் தான். இது அளவுக்கு மீறி சென்றுவிட்டால், தமனியை அடைத்து இருதய நோய் பாதிப்பு அல்லது பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவிடும். இந்த மோசமான கொழுப்பின் அளவைக் குறைக்க, நீங்கள் உங்கள் உணவை முறையை மாற்றுவதே முதல் முயற்சி. நல்ல கொழுப்பு வழங்கும் உணவுகளை அதிகம் சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில் நல்ல கொலஸ்ட்ரால் என்று சொல்லப்படக்கூடிய ஹெச்.டி.எல் கொழுப்பை பெறுவதற்கு வழிவகை செய்யும் உணவுகள் குறித்து தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
வெங்காயம்
ஒரு ஆய்வின் மூலம் வெங்காயத்தில் காணப்படும் குர்செடின் என்கிற பொருள் கொழுப்பைக் குறைக்க உதவுவது தெரியவந்துள்ளது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் காரணமாக தமனிகளின் வீக்கம் மற்றும் கடினமாவதை தடுக்க வெங்காயம் உதவுகிறது. வெங்காயத்தை பச்சையாகவும், சாலட் அல்லது ஆம்லேட்டில் போட்டு சாப்பிடும் போது பலன் அதிகளவில் கிடைப்பது ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொட்டைகள்
வால்நட் போன்ற கொட்டைகள் இருதயத்துக்கு வலு சேர்க்கின்றன. அதன்மூலம் கிடைக்கும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை சேர்க்கிறது. மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த கொட்டைகளை சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. பொதுவாக நட்ஸ் என்கிற கொட்டைகளில் பைட்டோஸ்டெரால்கள் என்கிற பொருள் உள்ளது. இதன்மூலம் குடல்கள் கெட்டக் கொழுப்புகள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் இந்தக் கொட்டைகளை தினமும் உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
பூண்டு
உணவு வகைகளில் பூண்டு சேர்த்துக்கொண்டால், அதனுடைய சுவை கூடும். அதேபோல அந்த உணவை சாப்பிடுபவர்களின் உடல்நலனும் மேம்படும். பூண்டு சேர்க்கப்பட்டால், அந்த உணவுக்கு ஒரு திடமான சுவை கிடைக்கிறது. இதில் இருக்கும் அல்லிசின் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதன்மூலம் உடலில் இருக்கும் மொத்த எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவும் குறையும். அதனால் அவ்வப்போது உங்களுடைய உணவில் பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.
மீன் உணவுகள்
பல்வேறு மீன் உணவுகளில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் கிடைக்கின்றன. குறிப்பாக சால்மன், கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் கொழுப்பு அமிலங்களின் ஆதாரம் போதுமான அளவு உள்ளது. ஒமேகா 3 மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவு உடலுக்கு கிடைக்கிறது. இதனால் இருதய நலன் மேம்படுகிறது. பக்கவாதம் அபாயம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. ஒரு ஆய்வில் மீன் சாப்பிடும் முதியவர்களிடம் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் குறைந்து காணப்படுவது தெரியவந்துள்ளது. வயதானவர்கள் வாரத்திற்கு ஒருமுறை வேகவைத்த அல்லது சுட்டெடுத்த மீன்களை சாப்பிடலாம். மாறாக மீன்களை வறுத்தும், வேகவைத்தும் சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
பழங்கள்
சரிவிகித உணவுக்கு, பழங்களைச் சேர்த்துக் கொள்வதும் அவசியம். பல பழங்கள் இதயத்திற்கு ஆரோக்கியமானவை மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து கொண்டவை, இது எல்டிஎல் அளவைக் குறைக்க உதவும். ஆப்பிள், திராட்சை, சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளில் பெக்டின் என்கிற கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அதனால் இருதய நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.