
காதுக்குடுமியை அகற்ற பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ், சட்டைப் பின், நெருப்புக் குச்சி போன்றவற்றைக் காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது.
அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உராசி புண்படுத்தக் கூடும்.
அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும்.
அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவிப்பறையைக காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவற்றை உபயோகிப்பது அறவே கூடாது.
காதுக் குடுமியை கரைத்து இளகவைத்தால் தானாகவே வெளியேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர்தான். உப்புத் தண்ணீர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓயில் போன்றவையும் உதவக் கூடும். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட
(Waxol, Cerumol) காதுத்துளி மருந்துகளும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ், குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் சுத்தப்படுத்தலாம்.
இவ்வாறு வெளியேறாது விட்டால் மருத்துவர் சிறிய ஆயுதம் மூலம் அகற்றக் கூடும். அல்லது அதனை கழுவி வெளியேற்றுவார். இதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலியும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும் (Suction device) உபகரணம் மூலம் சுலபமாக அகற்றவும் முடியும்.
தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத்தியம் உண்டு.