
அதிக உப்பு நிறைந்த பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது இருதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடுபவர்களுக்கு சரியாக 30 நிமிடத்தில் அதற்கான பாதிப்பு தெரியவரும்.
உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இருதயத்திற்கு ஆபத்தானது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலாளர் ஆய்வு குழுமம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில், டிக்கின்சன் குழு வினர் மேற்கொண்ட ஆய்வில் 16 ஆரோக்கியமான நபர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 8 நபர்களுக்கு குறைந்த அளவு உப்பு உபயோகப்படுத்தப்பட்ட தககாளி சூப் 10 முறை வழங்கப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு உப்பு அதிகம் பயன்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி கொடுக்கப்பட்டது.
பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட பின்னர் ரத்தமானது இருதய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தது.
இதே ஆய்வு மீத முள்ள 8 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த ரத்த ஒட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன்படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தது தெரியவந்தது.
எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
மேலும் உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது. இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே, அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும் என்றும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.