
பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நம் அனைவரும் அறிந்ததே. தினமும் ஒரு பழங்களை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே, உடல் எடையை குறைக்க பழங்கள் மற்றும் சாப்பிட்டால் போதுமா? அது நல்லதா? அப்படி சாப்பிட்டால் அதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
எடையை குறைக்க பழ உணவு பழக்கங்கள் என்றால் என்ன?
பழ உணவு பழக்கங்கள் என்றால், புதிய பழங்கள் மட்டும் சாப்பிடுவது இதில் அடங்காது. சிலர் புதிய காய்கறிகள், விதைகள், நட்ஸ்கள் சாப்பிடுவார்கள். மாறாக அரிசி, தானியங்கள், பால், இறைச்சி, உப்பு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டால் போதாது வெண்டைக்காய், குடைமிளகாய், சுரைக்காய், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், போன்றவற்றையும் சாப்பிடலாம்.
எடையை குறைக்க பழங்களை மட்டும் சாப்பிட்டால் என்ன ஆகும்?
1. புரதம் மற்றும் கொழுப்பு சத்து குறைபாடு ஏற்படும்:
எடையை குறைக்க தினமும் பழங்கள் மட்டும் சாப்பிட்டால் உடலில் புரதம் மற்றும் கொழுப்பு சத்து குறைவு ஏற்படும். இதன் விளைவாக தசை பலவீனம், சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகள் வரும். உடல் நன்றாக இயங்க புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மிகவும் அவசியம். இவை இரண்டும் பழங்களில் கிடையாது. ஆகவே எடையை குறைக்க பழங்களை மட்டும் சாப்பிட வேண்டாம். இல்லையெனில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
2. இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் :
பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாகவே இருக்கும். அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கு வழி வகுக்கும். இது தவிர அதிக சர்க்கரை அளவில் காரணமாக எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
3. செரிமான பிரச்சனைகள் ஏற்படும்:
பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அதன் அதிகப்படியான உள்ளடக்கம் வயிற்றுப்போக்கு, வாயு, வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது தவிர பழத்தில் இருக்கும் அதிக சர்க்கரை வயிற்று அமிலத்தன்மை மற்றும் அசிடிட்டி பிரச்சனை அதிகரிக்கும்.
4. எலும்பு பலவீனமடைதல் :
பழங்களில் கால்சியம், வைட்டமின் டி போன்ற தாதுக்கள் குறைவாக உள்ளன. ஆகவே நீங்கள் தொடர்ந்து பழங்களை மட்டும் சாப்பிட்டால் விரைவில் உங்களது எலும்புகள் பலவீனமடையும். இதன் விளைவாக ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முக்கியமாக இது பெண்களுக்கு ஆபத்து.
5. பல் சொத்தையாகும்:
பழங்களில் உள்ள சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலம் பல் சொத்தை மற்றும் பல் எனாமல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே பழங்கள் மற்றும் பல சாறுகளை அடிக்கடி சாப்பிட்டால் பல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
6. உடல் சோர்வு:
பழங்கள் மிக விரைவாகவே ஜீரணமாகிவிடும் மற்றும் உடலுக்கு ஆற்றலையும் தரும். மேலும் நீண்ட நேரம் பசி எடுக்காது. ஆகவே நீங்கள் இதை தொடர்ந்து சாப்பிடால் சோர்வுடன் இருப்பீர்கள். இதன் விளைவாக தலை சுற்றல் ஏற்படலாம் மற்றும் பலவீனமாக உணர்வீர்கள். ஒருவேளை நீங்கள் பழங்களை மட்டும் சாப்பிட்டு எடையை குறைத்தால் மீண்டும் எல்லா உணவுகளையும் சாப்பிட ஆரம்பிக்கும் போது எடை விரைவாக அதிகரிக்கும்.
7. ஊட்டச்சத்து குறைபாடுகள்:
எடையை குறைக்க பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் டி, துத்தநாகம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
நினைவில் கொள்:
பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் எடையை குறைக்க பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லதல்ல. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தராது. இது குறுகிய காலத்தில் எடையை குறைக்க உதவினாலும், எதிர்காலத்தில் பல உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே பழங்களுடன் புரதம், கொழுப்பு, தாதுக்கள் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக புதிய முயற்சிகளை ஏதேனும் செய்வதற்கு முன் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையை பெறுவது ரொம்பவே முக்கியம்.
பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
பழங்களை மட்டும் சாப்பிடுவதால் நன்மைகளும் கிடைக்கும். அதாவது, பழங்களில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மேலும் பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலை போகும். இது தவிர பழங்களில் குறைந்த கலோரிகள் இருப்பதால் எடையை சுலபமாக குறைத்து விடலாம். மேலும் இதய நோய், கொழுப்பு அளவை குறைக்கவும் இது உதவும். முக்கியமாக பழங்களில் உள்ள அன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
குறிப்பு:
எடையை குறைக்க பழங்களை மட்டும் சாப்பிடுவது சில சமயங்களில் தற்காலிகமாக நன்மை பயக்கும் என்றாலும், நீண்ட காலத்திற்கு பின்பற்றினால் பல உடல்நிலை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். காரணம் பழங்களில் புரதம், கால்சியம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் இல்லை. ஆகவே ஆரோக்கியமான இடையப்புக்கு ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தேவை எனவே பழங்களுடன், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு எடையை குறையுங்கள்.