ஆஸ்துமா நோயாளிகளுக்கு குளிர்காலத்தில் அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவது வழக்கமானது தான். காலநிலை, காற்று மாசுபாடு, உணவு பழக்கவழக்கம் உள்ளிட்டவை காரணமாக ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுகிறது.
ஆஸ்துமா பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரவலாக காணப்படுகிறது. நுரையீறலை பாதிக்கும் ஒவ்வாமை பிரச்னையால் இந்நோய் ஏற்படுகிறது. ஒவ்வாமை தரும் பொருட்களை மூச்சுக் காற்றின் மூலம் உள்ளிழுப்பதால், இந்த பிரச்னை ஏற்படுகிறது. மூச்சுத் திணறல், நாள்பட்ட இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஆஸ்துமாவுக்கான அறிகுறிகளாக உள்ளன. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்காலத்தில் கவனம் இருப்பது முக்கியம். மேலே கூறப்பட்ட அறிகுறிகள் தோன்றும் போது மருத்துவரை உடனடியாக அணுகவும். அதுதவிர, வீட்டு வைத்திய முறையிலும் மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்படாமல் தடுக்க முடியும். அதுகுறித்த விரிவான தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இஞ்சி
சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் அசைவ ப்ரியர்களுக்கும் பொதுவாக விரும்பும் உணவுப் பொருட்களில் ஒன்று இஞ்சி. இதிலிருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணிலாடங்காதவை. நமது உணவுகளில் இஞ்சியை தொடர்ந்து சேர்த்து வருவதன் மூலம் உடலுக்கு எதிர்ப்புச் சக்தி கூடுகிறது.வெறும் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் இஞ்சிச் சாறு சேர்த்து குடித்தால் கூட ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல பலனை வழங்கும்.
பூண்டு
இஞ்சி என்று சொன்னவுடன் அடுத்து பூண்டின் பயனை பேசாமல் இருந்துவிட முடியாது. பூண்டில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற பிரச்னைகளுக்கு பூண்டு சாப்பிடுவது நல்ல பலனை வழங்கும். தினமும் ஒரு பூண்டு பல்ல நன்றாக தட்டி, அதை ஒரு கிளாஸ் சுடு தண்ணீரில் போட்டு குடித்து வருவது உடலுக்கு நல்ல ஆரோக்கியமாக அமையும். ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், ஒரு அரை கப் பாலில் நான்கு பூண்டு பற்களை தட்டி பருகி வரலாம்.
மஞ்சள்
இந்த பட்டியலில் மஞ்சள் மூன்றாவது இடத்தில் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமினின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டுள்ளது. இதன்மூலம் உடலில் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகரிக்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் முடிந்தவரை, தாங்கள் உட்கொள்ளும் அனைத்து உணவு வகைகளிலும் காரத்தை குறைத்துக் கொண்டு மஞ்சள் சேர்த்து வருவது மூச்சுத் திணறல் அடிக்கடி ஏற்படுவதை தடுக்கும்.
வெங்காயம் முதல் பூண்டு வரை- கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் அற்புத உணவுகள்..!!
மிளகு
உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட சமையல் பொருட்களில் ஒன்று மிளகு. இதை தேடித்தான் பல உலக நாடுகள் இந்தியாவை வந்தடைந்தன. இதன்மூலம் தான் நம் நாட்டில் அடுத்தடுத்து புரட்சிகள் ஏற்பட்டன. ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை அறிகுறிகள் குளிர்காலத்தில் மோசமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதை தடுப்பதற்கு உணவுப் பொருட்களில் மிளகு அதிகமாக சேர்த்துவரலாம். இது மூச்சுத் திணறலின் போது நுரையீறலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
கீரைகள், காய்கறிகள்
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட்டு வரவேண்டும். நிறைய காய்கறிகள், கீரைகளை உணவில் எடுத்துக்கொண்டே வரவேண்டும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆண்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்ட கிரீன் டீ, உடலில் ஏற்படும் தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடும்.