பாக்கெட் உணவுகளை தொடர்ந்து உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எல்லாவற்றையும் அவசரமாக செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், பாக்கெட் உணவுகளின் தேவை அதிகரித்துள்ளது. போகிற போக்கில் அவற்றை வாங்கி பலரும் பசியாறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாக்கெட் உணவுகளில் உள்ள சேர்மானங்களில் எவ்வளவு கெட்ட கொழுப்பு சத்து, உப்பு, சர்க்கரை ஆகியவை கலந்துள்ளன என்பதை எளிய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் குறிப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாக்கெட் உணவுகளை அதிகமாக உண்ணும் போது நம்முடைய உடலுக்கு ஏற்படும் நோய்களை குறித்தும் அந்த பாக்கெட்டில் அச்சடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விஷயங்கள் குறித்து மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார். பாக்கெட்டில் போட்டு விற்கப்படும் உணவு பொருளில் அதிகமான கெட்ட கொழுப்பும், சர்க்கரையும், உப்பும் இருந்தால் அது உடலுக்கு தீமை செய்யும் (Junk food) உணவு என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கோடைகாலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா! உடலின் பல நோய்களை 1 பலா சுளை எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா?
இந்த உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு உடல் பருமன், சா்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் ஆகிய பயங்கர பாதிப்புகள் உண்டாகின்றன. குழந்தைகள் மத்தியில் இந்த உணவு பண்டங்கள் பயன்பாடு அதிகம் உள்ளது. ஆகவே தான் அனைவருக்கும் அந்த உணவுகளின் பக்க விளைவுகளும் தெரியும் வண்ணம் பாக்கெட்டுகளில் அச்சிட அறிவுறுத்தப்படுகிறது.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் கடிதத்தில் கூறியுள்ளதாவது:"பாக்கெட் உணவுகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நிறக் குறியீடு அல்லது எச்சரிக்கை குறியீடுகள் ஏதேனும் அச்சிட்டு லேபிள் செய்ய வேண்டும். ஒரு நபர் ஒரு நாளில் எவ்வளவு கொழுப்புச் சத்து, சா்க்கரை, உப்பு சத்துகளை எடுத்து கொள்ள வேண்டும், அந்த உணவு பாக்கெட்டுகளில்அவை எவ்வளவு இருக்கிறது என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அச்சடிக்க வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை மக்கள் வாங்க உதவியாக இருக்கும்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை எப்போது? என்னென்ன செய்தால் நம் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும் தெரியுமா?