
இட்லி மீந்து விட்டதா? இனி வீணாக்காமல் சட்டென மசாலா இட்லியாக்கி அசத்துங்க
இட்லி, தமிழர்களின் அன்றாட காலை உணவாக மட்டுமல்ல, பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து உண்ணும் நல்ல ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. பல நேரங்களில் காலை உணவிற்கு செய்த இட்லிகள் மீதமாகிவிடும். அவற்றை இப்படி வித்தியாசமாக முயற்சித்து பாருங்க, ஒரு சிறந்த விரைவான ஸ்நாக் மசாலா இட்லி ஆகும். மிதமான காரத்துடனும், மசாலாக்களின் நறுமணத்துடனும் இருக்கும் இந்த மசாலா இட்லி, மாலை நேர ஸ்நாகாக இருக்கும். இது வெறும் 10 நிமிடங்களில் தயார் செய்யலாம். அதனால் வேலைப்பளுவிற்கு இடையில் கூட ஒரு ஸ்பைசி ஸ்நாக் ரெசிபியாக இருக்கும்.
மசாலா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
மீந்த இட்லிகள் – 4 (அல்லது தேவையான அளவு)
சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) – 6 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு (அலங்காரத்திற்காக)
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
உலர் அத்திப்பழம் சூப்பர் ஃபுட்....எப்படின்னு தெரியுமா ?
செய்முறை:
- மீந்த இட்லிகளை நன்றாக கத்தியால் அல்லது கைகளை பயன்படுத்தி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதிகமாக நசுங்காமல் இருக்க குளிர்ந்த இட்லிகளை பயன்படுத்துவது சிறந்தது.
- மசாலா தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் தக்காளி சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- வெந்த தக்காளியில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.
- பிறகு வெட்டிய இட்லி துண்டுகளை சேர்த்து, மசாலா அனைத்தும் இட்லியில் ஒட்டுமாறு மிதமான தீயில் கிளறி 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
- சிறிது எண்ணெய் மேல் தெளித்து, கரண்டியை வைத்து மெதுவாக கிளறினால் இட்லிகள் அழகாக மசாலாவுடன் சேர்ந்திருக்கும்.
- கொத்தமல்லி தூவி, சூடாக பரிமாறலாம். கூடவே ஒரு கப் டீ வைத்துக் கொண்டால், இது ஒரு முழுமையான ஸ்நாக் ஆகும்.
மசாலா இட்லியின் சிறப்புகள் :
- மீந்த இட்லிகளை வீணாக்க வேண்டியதில்லை.
- சிறந்த சத்தான ஸ்நாக்காக இருக்கும். பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
- குறைந்த நேரத்தில் செய்யலாம். 10 நிமிடங்கள் போதும்
- மிதமான காரத்துடன் இருக்கும் தனித்துவமான சுவை
- குழம்பு அல்லது சட்னி கூட தேவையில்லை
- சோயா சாஸ், டமாட்டோ சாஸ், மற்றும் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்தால் சைனீஸ் ஸ்டைல் மசாலா இட்லி கிடைக்கும்.
- கடலை மாவு, மைதா, மிளகாய்த்தூள் கலந்து பிரட்டினால் சிறிது கிரிஸ்பியாகவும் செய்யலாம்.
- முடக்கத்தான் கீரை, முருங்கைக்கீரை சேர்த்தால் நூடுல்ஸ் போல் இட்லி உதிர்ந்துவிடும் . மிகவும் ஆரோக்கியமானது.